Friday, May 28, 2010

மர்ம யோகி அகத்தியர் 5

சித்தர்கள் பற்றிய வரலாறு  ஒரு இடியாப்பச் சிக்கலாக இருப்பதன் காரணம் ,நமது ஆட்களின்  எதையும் ஆவணப் படுத்தி வைக்காத தன்மையே.இது தமிழரின் குணம் மட்டுமல்ல,இந்தியரின் தேசிய குணம் இன்று ஏற்படுகிற நிறைய அரசியல் குழப்பங்களுக்கும் தவறான புரிதல்களுக்கும் இந்த அலட்சியப் போக்கே காரணம்.இரண்டு மாவட்டங்களை ஆண்டவர்கள் கூட தங்களை திரிபுவனச் சக்கரவர்த்தி என்று கல்வெட்டுகளில் பொறித்துக் கொள்வது இந்திய வரலாற்றில்  நிகழ்ந்து இருக்கிறது.ஒரே போரில் இரண்டு மன்னர்களும் வென்றதாக இரண்டு வெவ்வேறு கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன!இந்த குழப்பம் போதாது என்று பின்னால் வந்தவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப இந்திய தமிழக வரலாற்றில் கைவைத்திருக்கிறார்கள்.ஒன்றும் பெரிய சிரமம் இல்லை. சித்தர் பாடல்கள் பெரும்பாலும் எளிதான தமிழிலேயே உள்ளன.[ஆனால் கடினமான இன்னொரு அர்த்தம் தரும் உள்குத்தும்  இருக்கலாம்]ஆகவே இடைச்செருகல் செய்வது எளிது.செய்திருக்கிறார்கள்.ஆங்கிலேயரோடு வந்த பாதிரிகள் இதில் நிறைய' சேவை ''செய்திருக்கிறார்கள்.ரொம்ப 'திருத்த'  முடியாத நூல்களை பொட்டலம் கட்டி தங்கள் நாடுகளுக்கு அனுப்பிவிட்டார்கள்.அவர்களுக்கு தெரியும்  நமது வரலாற்று உணர்வு பற்றி.தமிழ் தமிழ் என்று கத்துவோமே தவிர இந்த நூல்களை எல்லாம் தேட மாட்டோம் என்று.நாம் இதுவரை தேடவில்லை.இன்னமும் அவை ஐரோப்பா ம்யுசியங்களில் தூங்குகின்றன .

சங்க இலக்கியத்தில் சித்தர் என்ற வார்த்தையே இல்லை.நிகண்டுகளிலும் காணப்படவில்லை.வேதங்களிலும் ரிஷிகள்தான் வருகிறார்கள் தவிர சித்தர்களைக் காணோம் .ஸ்வேதா ஆரண்ய உபநிஷத்தில் சித்தன் என்ற வார்த்தை உள்ளதாக துப்பறிந்து இருக்கிறார்கள்.அறிவன் என்ற தமிழ் சொல் சித்தர்களைக் குறிக்கலாம் என்று கருதப் படுகிறது.அப்படியானால் திருமூலர் வருடத்துக்கு ஒன்றாய் திருமந்திரம் மூவாயிரம் எழுதினார் என்பதை எல்லாம் எப்படி புரிந்து கொள்வது?
சித்தர்களில் பலபேர் தமிழர்கள் கிடையாது.ஆனால் தமிழில்தான் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள்.அகத்தியர்,போகர் தவிர புலிப்பாணி மங்கோலியர்  .கோரக்கர் வட இந்தியர் .[அகத்தியரைப் போலவே இவருக்கும் வட இந்தியாவில் கோயில்கள் உண்டு.கோரக்பூர் என்று ஊரே உண்டு.கஞ்சா இவர் கண்டுபிடித்ததுதான்!சித்தர்கள் பாஷையில் கோரக்க மூலி என்றே அதைச் சொல்லுவார்கள்.]திருமூலரும் வட இந்தியரே .காச்மீரத்தில் இருந்து தமிழகம் வந்தவர்.வந்த காரணமே அகத்தியரைத் தேடித்தான்.வந்த இடத்தில் என்ன என்னவோ ஆகி கூடுவிட்டு கூடு பாய்ந்து திரு மந்திரம் படைத்தார்.கூடு மாறிய இடம் திருவாவடுதுறை. சமீபத்தில் திருவாவடுதுறை ஆதீனம் திருமந்திரத்தின் பத்தாம் தந்திரத்தை வெளியிட்டிருக்கிற விஷயம் தமிழ் ஊடகங்களில் எங்கும் வராதது நம் தமிழ் ஆர்வத்திற்கு ஒரு சான்று.[மச்சான்ஸ்,மானாட மயிலாட மறந்துராதீங்க]திருமந்திரத்துக்கு இதுவரை ஒன்பது தந்திரங்கள்தான் அறியப் பட்டிருக்கிறது.திருமந்திரத்தில் காச்மீரச் சைவச்சித்தாந்தக் கூறுகளை அதிகம் காணலாம் .ஆறு ஆதாரங்கள்,தாந்திரீக யோகம்ஆகியவை காச்மீர சைவக் கூறுகளே.காச்மீருக்கும் சீனாவும் திபெத்தும் நிறைய சித்தாந்தக்  கொடுக்கல் வாங்கல்கள் இருந்தன.
நம்மைப் போல் அல்லாது எதையும் சரியாக ஆவணப் படுத்தி வைக்கும் வழக்கம் சீனர்களிடம் இருந்தது.3000BC யில் இருந்தே பாப்பிரஸ் தாள்களில் வரிசையாக தங்கள் வரலாற்றைப் பதிவு செய்து வந்திருக்கிறார்கள்.
ரொம்ப நாள் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு நிறைய இருந்தது,மறுபிறவி,மரணத்தின் பின் வாழ்க்கை பற்றியெல்லாம் அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை.அதற்காக  பயிற்சிகளையும் மருந்துகளையும் தேடிக் கொண்டே இருந்தார்கள்.மூத்திரத்தைக் குடித்தார்கள்.பாதரசத்தை [கடும் விஷம்]பாடம் பண்ணி சாப்பிட்டு சாகிறோமா இல்லையா என்றெல்லாம் பரிசோதனை பண்ணிப் பார்த்தார்கள் நம்முடைய சித்தர்களிடமும் இந்த நோக்கைக் காணலாம்.மற்றவர்கள் எல்லாம்  மீண்டும் பிறவா வரம் கேட்டுக் கொண்டிருக்க சித்தர்கள் மரணம் இல்லா பெருவாழ்வுக்காக பரிசோதனை பண்ணிக் கொண்டிருந்தார்கள்.சீனர்கள் வைத்தியத்திலும் பெரு ஆர்வம் காட்டினார்கள்.அக்கு பங்க்சர் வர்மம் இரண்டுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் காணப் படுகின்றன.ரசவாதத்திலும் வல்லவர்கள்'
ரசம் என்றால் பாதரசம் சாதரண நிலையில் கடும் விசமாக உள்ள இந்த பொருள் சரியான முறையில் பாடம்  செய்யப்பட்டால் நிறைய நோய்களை தீர்க்கும்.ஏன் மரணமில்லா பெருவாழ்வையே அளிக்கக் கூடும் என்று நம்பினார்கள் சித்த மருத்துவத்தில் இன்று எய்ட்சுக்கு தரும் மருந்து பாதரசம் சார்ந்ததே.சித்தமருத்துவத்தில் பாதரசம் தவிர்க்க முடியாத பொருள்.ஆனால் பாதரசம் இந்தியாவில் எங்கும் கிடைக்காது!பிறகு எங்கிருந்து பாதரசம் வந்தது?சீனத்த்தில் இருந்தது தான்.காவலுக்கு இருந்த 'அரக்கர்கள்'கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு சீனாவில் உள்ள பாதரசக் கிணற்றில் இருந்து ரசத்தைக்  கடத்திய கதையை போகர்  தன் நூலில் பதிவு செய்திருக்கிறார்..

1 comment:

C.Pon said...

Mercury is a mystic substance.Please visit the following link http://www.youtube.com/watch?v=71mttSkPIHQ . I dont know is it real,but it is an interesting video about the preparation of rasamani.

LinkWithin

Related Posts with Thumbnails