Sunday, June 27, 2010

மர்மயோகி அகத்தியர் 7

உலகம் அணுக்களால் ஆனது என்ற கருதுகோள் ஒன்றும் புதிய கருத்து அல்ல.குறைந்தது  2000 வருடங்களாவது இந்த கருத்து மனிதனை வசீகரித்து வந்திருக்கிறது.இந்த அணுக்களின் அமைப்பை மாற்றுவதன் மூலம் நாம் விரும்பும் வகையில் பிரபஞ்சத்தையும் அமைத்துக் கொள்ளலாம்.என்ற கருத்துதான் சித்தர்களை ரசவாதம் நோக்கி ஈர்த்திருக்க வேண்டும்.முன்பே சொன்னது போல சித்தர்கள் மதவாதிகளைப் போல இந்த பிரபஞ்சம் அதன் அத்தனை விதிகளுடனும் முழுமையாக கடவுளால் படைக்கப் பட்டு வெளியிடப் பட்டது என்பதை நம்பவில்லை.தொடர்ச்சியாக இந்த பிரபஞ்சத்தில் மாற்றங்களும் மேம்படுத்துதலும் செய்ய இயலும் என்றே நம்பினார்கள்.இன்றைய அறிவியலும் ஏறக்குறைய இதே நோக்கில் தான் செயல்படுகிறது .இல்லையா?[மென் பொருட்களுக்கு புதிது புதிதாய் பதிப்புகள் வருவது போல.]ஆனால் அவர்கள் இறை என்ற விஷயத்தை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எல்லாவற்றுக்கும் ஆதாரமான பொருளை இறைதான் படைக்கிறது.சில சித்தர்கள் அதில் கூட வேறுபட்ட கருத்துக்கள் கொண்டிருந்தனர்.விஸ்வாமித்திரர் திரிசங்கு சொர்க்கம் படைத்தது போல சித்தர்களின் சில செயல்கள் பிரம்மனையும் சிவனையுமே  கலவரம் அடையச் செய்ததாக கதைகள் கேட்கலாம்.சில பிரபஞ்ச ரகசியங்களை வெளியிடக் கூடாது என்று சில சித்தர்களுக்கு சித்தர் குழாமால் அழுத்தம் தரப் பட்ட செய்திகளை அறியமுடிகிறது.இந்த மாதிரி விசயங்கள் தீயவர் கைகளில் சேர்ந்து விடக் கூடாது என்று எச்சரிக்கையுடன் இருந்திருக்கின்றனர்.இந்த காரணம் கொண்டே அவர்கள் நூல்களை சந்தி பாஷையில் எழுதி வைத்தனர்.
இன்றைய அறிவியல் ஏறக் குறைய இதே நோக்கில்தான் நகர்கிறது.அறிவியலும் பிரபஞ்சத்தின் அமைப்பு அணுக்களினால் ஆனது என்கிறது.அதன் அமைப்பை மாற்றுவதன் மூலம் பெரும் சக்தி கிடைக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறது.ஆனால் அந்த சக்தி தீவிரவாதிகள் கைகளில் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காய் படாத பாடு படுகிறது.ரசவாதத்தின் மூலம் சித்தர்கள் சாதாரண உலோகங்களை தங்கமாக்கினர்  எனப் படுகிறது.நவீன அறிவியலின் மூலமும் இதை செய்யமுடியும்.என்ன தங்கத்தின் விலையை விட அதிகம் செலவாகும் .சித்தர்கள் இந்த காரியத்தை மூலிகைகள் மூலமும் பாதரசம் போன்ற தனிமங்கள் மூலமும் சாதித்தனர்.அதாவது இயற்கையில் உள்ள பொருட்களையே எடுத்து இயற்கையை வளைத்தனர்.

இதே நோக்கில்தான் அவர்கள் மனித உடலையும் அணுகினர்.அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்பது அவர்கள் நோக்கு.அதாவது பிரபஞ்சமும் மனிதனும் ஒரே விதிகளால் ஆனவர்கள்தான்.புற உலகில் உள்ள எல்லா விசயங்களும் மனித உடலுக்குள்ளும் இருக்கின்றன.அதாவது சிறிய அளவில்.புற உலகில் ஏற்படும் மாற்றங்கள் எவ்விதம் மனிதனைப் பாதிக்கிறதோ அது போல் மனித உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மூலம்  புற உலகையும் பாதிக்கலாம்.சித்தர்களின் சித்து விளையாட்டுக்களின் அடிப்படைத் தத்துவம் இதுவே.

 இன்னும் விளக்குகிறேன்.தங்கம் போன்ற பல  உலோகங்கள் நமது உடலிலும் உள்ளன .[சிறிய அளவில்]சித்தர்கள் ஆணின்  விந்தையே பாதரசமாக சொல்வார்கள்.பெண்ணின் சுரோணிததை கந்தகமாகக் கொள்வார்கள்.இரண்டும் எதிர் எதிர் நிலைகள்.ஆனால் இரண்டும் இல்லாமல் படைப்பு நிகழாது.ஆனால் பாதரசம் அப்படியே பயன் படாது.அந்த நிலையில் அது கடும் விஷம்.அதை சுத்தம் செய்து மாற்ற வேண்டும்.பாதரசத்துக்கு ஏழு சட்டைகள் உண்டென சித்தர் பாஷையில் சொல்வார்கள்.அதாவது ஏழு மாசுகள்.அவை எல்லாவற்றையும் சுத்திகரித்த பிறகே அது ரசவாதத்துக்கு பயன்படும்.அதே போலதான் விந்தும் .சித்தர்களின் உடற்கூறு படி மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனது.நாம் உண்ணும் உணவு ரத்தம் மாமிசம் என்று ஒவ்வொரு தாதுவாய் மாற்றம் பெற்று வந்து  ஏழாம் மற்றும் கடைசித் தாதுவான விந்தாய் மாறுகிறது!புரிகிறதா?சித்தர்கள் விந்து விட்டான் நொந்து கெட்டான் என்று ஏன் சொன்னார்கள் என்று?

இந்த காரணம் கொண்டே சித்தர்கள் மருத்துவத்திலும் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தினார்கள்.ரசவாதத்தில் பயன்படும் அதே மூலிகைகளையே மருத்துவத்திலும் பயன் படுத்தினார்கள்.விந்தையும் சுரோணிததையும் காம மற்றும் ஜனப் பெருக்க காரியங்கள் தவிர வேறு உத்தேசங்களுக்கும் பயன் படுத்தலாம் என்பது அவர்கள் துணிபு.

Thursday, June 10, 2010

மர்ம யோகி அகத்தியர் 6

இந்த போகர் இன்னும் ஒரு சுவராஸ்யமான சித்தர்.அகத்தியருக்கு அடுத்தபடி தமிழ் நாட்டில் மிக அறியப் பட்ட சித்தர் போகர் தான்  எனலாம்.ஆனால் அகத்தியர் போல புராணங்களில் இதிகாசங்களில் எல்லாம் காணப் படவில்லை.இவரது வரலாற்றிலும் நிறைய முரண்பாடுகள் உண்டு.அவர் சீனர் என்பது ஒரு கூற்று.இல்லை  இந்தியாவில் விஸ்வ கர்மா[கொல்லர் மற்றும் ஆசாரி] குலத்தில் பிறந்து சீனா சென்று திருமூலரைப் போல் போங் யான்க் என்பவர் உடலில் புகுந்து 12000 ஆண்டுகள் [!] உயிர் வாழ்ந்து நிறைய நூல்கள் சீனமொழியில் பல நூல்கள் எழுதி மீண்டும் தமிழ்நாடு வந்து பழனி தண்டாயுதபாணி சிலையை வடிவமைத்தார் எனவும்  சொல்வர்.[சித்தர்கள் வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து போராடிய சமூக சீர்திருத்த வாதிகள் என்ற படிமம் ஒரு பக்கம் இருந்தாலும் ஒவ்வொரு சித்தரின் வரலாற்றிலும் மறக்காமல் அவர்களது ஜாதி குறிப்பிடப் படுகிறது.ஏறக்குறைய எல்லா சாதியிலும் இருந்து சித்தர்கள் தோன்றி உள்ளனர்.]

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்வது போன்ற நம்பச் சிரமப் படுத்தும் விசயங்கள் சித்தர்களிடம் நிறையவே உண்டு.ஆனால் விவிலியத்திலும் இது போல் நூற்றுக் கணக்கான ஆண்டுகள் வாழும் மனிதர் பற்றி தகவல் உண்டு.ஆதாம் 930 வருடங்கள் வாழ்ந்ததாக சொல்லப் படுகிறது.அவனது முதல் குழந்தை பிறக்கையில் அவன் வயது 130 !படிப் படியாக மனிதரின் வாழ்நாள் குறைந்தது என விவிலியம் கூறுகிறது.காக புசுண்டர் யுகம் யுகமாக இருப்பதாக போகர் தனது போகர் 7000 நூலில்  கூறுகிறார்.இது போல் பல நம்ப கடினமான  செய்திகள் இந்நூலில் உண்டு.உதாரணத்துக்கு சீனாவில் ஒரு பிரதேச பெண்களுக்கு மாத விலக்கே வருவதில்லை என்கிறார்!இன்னொரு இடத்தில் தான் தயாரித்த ரசமணி கடலைக் குடித்தது என்கிறார்!தான் தயாரித்த ககனக் குளிகை எனப் படும் ரசமணி உதவியுடன்தான் அவர் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அவர் ஆகாயப் பயணம் செய்கிறார்!

இந்த ககனக் குளிகை போலவே கமனக் குளிகை என்றும் ஒன்று உண்டு.கமனம் என்றால் உடல் உறவு.அந்த சமயத்தில் இதை இடுப்பில் கட்டிக் கொண்டால் விந்து வெளியேறவே செய்யாது என்று கூறப் படுகிறது.[இதை செய்து தருகிறேன் என்று நிறைய பேர் கோடீஸ்வரன் ஆகிவிட்டார்கள்] உண்மையில் சித்தர்கள் பாஷையில் பாத ரசம் சிவனின் விந்து என்றே அழைக்கப் படுகிறது.சக்தியின் நாதம் [மதன நீர்]கந்தகமாக உருவகிக்கப் படுகிறது.இரண்டும் இணைந்தால் தான் உயிரும் பிரபஞ்சமும் உருவாக முடியும்.ரசமும் கந்தகமும்  எதிர் எதிர் நிலைகள்.பாதரசம் குளிர்ச்சியானது.ஆண் தன்மை கொண்டது.கந்தகம் பெண்தன்மை கொண்டது.சூடானது. பெண்கள் உடலில் கந்தகச் சத்து அதிகம்.அதனால் தான் பெண்களின் உடல் ஆண்களின் உடலை விட சூடாக உள்ளது.


ரசவாதம் என்பது இங்கு மட்டும் அல்ல உலகம் முழுவதும் இருந்திருக்கிறது.ஒரு வகையில் நவீன  வேதியியலின் முன்னோடி என சொல்லலாம்.பிரபஞ்சம் முழுவதும் அணுக்களால் ஆனது என்ற கருத்து தோன்றிய உடன் வெகு சீக்கிரமே இந்த அணுக்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப செயற்கையாக மாற்றும் இச்சையும் மனிதனுக்கு தோன்றிவிட்டது.சித்தர்களுக்கும் மற்ற ரிஷிகள் தீர்க்கதரிசிகள் போன்றோருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடே இதுதான்.சித்தர்கள் இந்த பிரபஞ்சத்தை இறை படைத்தது என்று  வணங்கி விட்டு சும்மா இருந்து விட வில்லை.நவீன  அறிவியலாளர்கள் போல் அதை மாற்றி அமைக்க முயற்சி செய்தார்கள்.அவர்கள் மரணத்தைக் கூட இயல்பானது என்று ஒப்புக் கொள்ளவில்லை. மத ஞானிகளைப் போல் அவர்கள் உடலை வெறுத்து ஒதுக்க வில்லை.பெரு மதங்கள் உடலை இழிவானது என்றும்  ஞானம் அடைவதற்கு தடை என்றும் சொன்ன வேளையில்  உடலின் மூலமாகவே ஞானம் பெற முடியும் என்ற மாற்று சிந்தனையை வைத்தவர்கள் சித்தர்கள்.'உடம்பை முன்னம் இழுக்கு என்றிருந்தேன் .'என்ற திரு மூலர் பாடல் பிரபலம்.அதில் அவர் 'உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே 'என்றே சொல்கிறார்.இதன் காரணமாகவே அவர்கள் மருத்துவத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.
ரசவாதத்தை சங்க இலக்கியம் போல் அகம் புறம் என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.சாதாரண உலோகங்களை தங்கமாக மாற்ற முயற்சிப்பதை புற ரசவாதம் என கூறலாம்.பொருளாசை அதிகம் இல்லாத சித்தர்கள் இந்த விசயத்தில் அதிக ஆர்வம் காட்டியதற்கு காரணம் புதிராக இருக்கிறது.ஆனால் அவர்கள் எழுதிய ரசவாத நூல்களைப் படித்துவிட்டு தங்கம் செய்கிறேன் என்று சொத்தை அழித்தவர்கள் அதிகம் உண்டு.நான் மதுரையில் இருந்தபோது தங்கியிருந்த விடுதியின்   காவலாளி பற்றி இதே போல்  ஒரு கதை சொன்னார்கள்.அந்த விடுதியே முன்பு அவருடையது தானாம்.தங்கம் செய்கிறேன் பேர்வழி என்று எல்லா சொத்தையும் இழந்து இறுதியில் குடும்பத்தாலும் துரத்தப் பட்டு கடைசியில் தனது விடுதியிலேயே காவலராக காலம் கழிப்பதாக சொன்னார்கள்.அவர் எப்போதும் அனைவரும் தூங்கிய பிறகு சீரோ வாட்ஸ் பல்பின் மங்கிய ஒளியில் ஒரு பழுப்பு புத்தகத்தை கண்களை இடுக்கி படித்துக் கொண்டே இருப்பார்.ஒரு நாள் பகலில் அவர் இல்லாத சமயம் அந்த புத்தகத்தை பிரித்துப் பார்த்தேன். வேறென்ன..''பதினெண் சித்தர்களின் ரசவாத ஞானம்!''

 

Sunday, June 6, 2010

ரஸ்புடினும் நித்தியானந்தாவும் 1

சமீபத்தில் நடந்த நீயா நானா நிகழ்வில் நித்தியானந்தா பற்றிய  பழைய நிலைப்பாட்டுக்கு சாருவை மன்னிப்பு கேட்க வைக்க எல்லோரும் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருந்ததில் அவர் ரஸ்புடின்,ஹீலிங் என்று தீனமாக முனகிக் கொண்டிருந்ததை யாரும் கவனித்தார்களா தெரியவில்லை .யார் இந்த ரஸ்புடின்?சாரு ஏன் அவரை இந்த விவாதத்திற்குள் கொண்டு வந்தார்?

கிரகோரி ரஸ்புடின் தோராயமாக 1860 களில் ரஷ்யாவில் சைபீரியா பகுதியில் பிறந்த துறவி [இந்த பகுதியில் இருந்துதான் ஓஷோவின் குரு குர்ட்ஜீபும் வந்தார்]ஒரு அண்ணன்.ஒரு தங்கை.அவளுக்கு வலிப்பு நோய் உண்டு.[இது ஒரு முக்கியமான விவரம்.மிஸ்டிக் என்று அழைக்கப் படும் அதீத உணர்வாளர்கள் பலருக்கு அல்லது அவர்கள் பரம்பரையில் பலருக்கு நரம்புச் சிக்கல்கள் இருந்திருக்கிறன]அவள் குளத்தில் மூழ்கி இறந்தாள்.சில நாட்கள் கழித்து ரஸ்புடின் தனது அண்ணனுடன் குளிக்க செல்கையில் அதே போன்று மூழ்கி காப்பாற்றப் பட்டாலும் அண்ணனின் நுரையீரலில் நீர் புகுந்து நிமோனியாவில் இறந்தான்.இந்த இரண்டு மரணங்களும் ரச்புடினை மிகவும் பாதித்தன.[இதுவும் ஒரு முக்கியமான கணணியே.இந்த அதீத உணர்வாளர்கள் பலருக்கு மரணம் தான் ஒரு திருப்பு முனையாக ,அவர்களை அக உலகு நோக்கி திருப்பும் விசையாக இருந்திருக்கிறது.பிரபல உதாரணம் புத்தர்.தான் தற்செயலாக வீசிய கயிற்றில் அடிபட்டு குருவி இறந்ததைப் பார்த்ததும் அதிர்ந்துதான் விசிறி சாமியார் ஞானம் தேடிப் புறப்பட்டதாக கேள்வி] பின்னால் அவரது குழந்தைகள் இருவருக்கு தனது சகோதரர்கள் பேரையே வைத்தார்.

சிறு வயதிலேயே ரஸ்புடின் காட்சிகள் காண ஆரம்பித்து விட்டார்.ஒரு திருட்டுக்கான தண்டனையாக  மூன்று மாதங்கள் ஒரு மடத்தில் தங்கி இருக்கையில் மேரி மாதாவின் காட்சியும் கிடைத்தது.அதன் பிறகு பதினெட்டு வயதில்  நமது தாந்திரீகம் போன்ற ஒன்றை கடைப் பிடிக்கும் ஒரு நாஸ்டிக் கிறித்துவ அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது.பிற கிறித்துவ அமைப்புகளைப் போல நாஸ்டிக் குழுக்கள் காமத்தை வெறுக்கவில்லை.மாறாக காமமும்  அவர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்று .இந்த அணுகு முறையுடன் அவர் மகாரி என்ற தனது குருவைச் சந்தித்தார் .அதன் பிறகு கல்யாணம்.மூன்று குழந்தைகள் .திருமணத்திற்கு புறம்பாக இன்னொரு குழந்தையும் உண்டு!அதன்பிறகு கொஞ்ச நாள் ஜெருசலேம் கிரீஸ் என்று தலபிரயாணம்  எல்லாம் போனார்.பிறகு பீட்டர்ஸ்பர்க் வந்தார்.இப்போது அவர் முழு மிஸ்டிக்காய் மாறி இருந்தார்.

ஆறரை அடி உயரம்.கட்டுமஸ்தான உடல்.தோள்வரை தொங்கும் முடி.அடர்ந்த புருவங்கள்.மிக மிக கூரிய பார்வை.தலை நகர வாசிகள் அவரை பைத்தியக் கார துறவி
என்று அழைத்தாலும் அவர் மேல் ஒரு அச்சம் கலந்த மரியாதை இருந்தது.காரணம் அவனது தோற்றம் மட்டும் அல்ல.நோய்களைக் குணப் படுத்தும் அவனது அரிய ஆற்றல் .

கொஞ்சம் கொஞ்சமாக அவனது புகழ் அரண்மனை வரை பரவியது.காரணம் ஜார் மன்னனின் மகனுக்கு இருந்த ரத்தக் கசிவு நோய்.இளவரசனுக்கு லேசாக உராய்ந்தால் கூட ரத்தம் நிற்காமல் பெருகி எமலோகம் வரை எட்டிப் பார்க்காமல் போகாது. அந்தக் காலத்தில் இதற்கு மருந்து இல்லை.இதேபோல் ஒரு கையறு தருணத்தில் அரண்மனைக்கு அழைக்கப் பட்டான் ரஸ்புடின்.இளவரசனை காப்பாற்றினான்!அன்றில் இருந்து ரஷ்ய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை ஆனான் ரஸ்புடின்.ராணிக்கு மிக நெருக்கம் ஆனான்.ஒவ்வொரு அரசியல் முடிவிலும் அவன் பங்கு இருந்தது.விளைவு எதிரிகள்.ஒரு கட்டத்தில் அவனைப் போட்டுத் தள்ளிவிட முடிவு செய்தார்கள்.விருந்துக்கு அழைத்து கேக்கில் சயனைட் கலந்து கொடுத்தார்கள்.அவன் அதை சாப்பிட்டுவிட்டு கல் மாதிரி இருந்தான்.துப்பாக்கியால் சுட்டார்கள்.பயன் இல்லை.அவனைக் கத்தியால் குத்தி சாக்குப் பையில் கைகளைக் கட்டி அடைத்து நதியில் தூக்கி எறிந்தார்கள்.மறுநாள் அவனது பிணம் நதிக் கரையில் கிடைத்தது.ஆனால் அவன் சாக்குப் பையில் இருந்து எப்படியோ வெளிவந்திருந்தான்!


ரஸ்புடினது இன்னொரு பக்கம் தான் சுவையானது.ரஸ்புடின் ஒரு பக்கம் ஆன்மீகவாதி.தனது பிரார்த்தனைகள் மூலம் தீராத நோய்களைக் குணப் படுததிகிறவன்.மறுபக்கம் பெரிய குடிகாரன்.ஸ்திரீ லோலன்.அவனுக்கு மிகப் பெரிய ஆண்குறி இருந்தது என்று அவன் மகளே எழுதி வைத்திருக்கிறாள்..[அவனைக் கொலை செய்தவர்கள் அவன் உறுப்பை மட்டும் தனியாக வெட்டி வைத்துக் கொண்டார்கள்!அது மிகப் பெரிய விலைக்கு  போனது என்று வேறு சொல்கிறார்கள்!]அவனுடன் உறவு கொள்ளும் பெண்கள் உச்ச்சகட்டத்தில் மயங்கி விழும் அளவுக்கு மன்மதக் கலையில் நிபுணன்.இப்படிப் பட்ட  ஒரு அ -ஒழுக்க நபருக்கு எப்படி இந்த ஆற்றல்கள் அல்லது சித்திகள் எல்லாம் வாயத்தது?நாம் பல காலமாக  துறவு பற்றியும் ஆன்மிகம் பற்றியும் ஒழுக்கம் பற்றியும் வைத்திருக்கும் கருதுகோள்கள் ஏன் ரச்புடினுக்கு பொருந்தவில்லை?நித்தி தான் செய்து கொண்டிருந்ததாக சொன்ன 'ஆராய்ச்சி' என்ன என்பதைப் பற்றி எல்லாம் அடுத்த பகுதியில் பேசலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails