Monday, August 16, 2010

மர்மயோகி அகத்தியர் 10

அவலோகிதேஸ்வரர் என்பவர் பௌத்த மதத்தின் முக்கியமான போதிசத்துவர்களில் ஒருவர்.போதிசத்துவர்கள் என்பவர்கள் புத்தரின் பரிநிர்வாண நிலையை அடைந்தவர்கள்.நமது அவதாரங்கள்,கிறித்துவத்தின் தீர்க்கதர்சிகள் ,இஸ்லாமின் நபிகள் போன்று சொல்லலாம்.பௌத்தத்தில் ஒரு முக்கியமான போதிசத்துவர் இவர்.தாய்லாந்து போன்ற இடங்களில் அதிகம் வழிபடப் படுகிறார்.இவரைப் பற்றி அதிகம் வரலாற்றுச் செய்திகள் கிடைக்கவில்லை.ஆனால் இவர் தான் நிர்வாணம் அடைந்துவிட்டாலும் உலக உயிர்கள் அத்தனையும் உய்யும்வரை அவர்களை வழிகாட்டுவதற்காக இந்த உலகிலேயே பொட்டிகால என்ற மலையில் இன்றும் இருக்கிறார் எனச் சொல்லப் படுகிறது.கதை வேறெங்கோ திசை திரும்புகிறதே என்று நினைக்கிறீர்களா.இல்லை.இந்த பொட்டிகால மலை வேறு இல்லை.நமது பொதிகை மலைதான்!இவ்வாறு நான் சொல்லவில்லை.shu hikosaka என்ற ஜப்பானிய அறிஞர் சொல்கிறார்.இனி அடுத்த குண்டு.இந்த அவலோகிடேச்வரர்தான் அகத்தியருக்கு பொதிகை மலையில் வைத்து தமிழ் கற்றுக் கொடுத்தார் என்கிறார் இவர்!

தமிழ்நாட்டில் சமணம் பற்றி நிறைய ஆய்வுகள் செய்யப் பட்டுள்ளன.அந்த அளவு பௌத்தம்  பற்றி தெரியவில்லை. ஆனாலும் ஆங்காங்கே சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.அசோகரின் புத்திரிகள் இலங்கைக்கு பௌத்தத்தைப் பரப்ப தென்தமிழகம் வழியாகத் தான் சென்றிருக்கவேண்டும்.ஆனால் இந்த அவலோகிடேச்வரர் என்று சிவனைத் தான் குறிப்பிடுகிறார்கள் என சந்தேகம் உண்டு.கடைசியில் உள்ள ஈஸ்வர் என்ற விகுதியைக் காண்க.மேலும் அவலோகிடேச்வரின் இன்னொரு பெயர் சண்டி!சண்டிகேஸ்வரரை நினைவில் கொள்க.இது போல் கடவுள்களைப் பரிமாற்றம் செய்து கொல்வது ஒன்றும் புதிதல்ல.ஹிந்து மதத்தில் உள்ள சரஸ்வதி,தாரா,விநாயகர் போன்ற தெய்வங்கள் சமணத்திலும் பௌத்தத்திலும் உண்டு.சிவன் மாரனை[மன்மதன்]எரித்த கதை பௌத்தத்தில் புத்தர் மாரனை வென்ற கதையாகச் சொல்லப் படுகிறது.ஆனால்  இங்கு மாரன் கிறித்துவம் கூறும் சாத்தானைப் போன்றவன்!நிர்வாண நிலை அடையாமல் உயிர்களை தனது மாயையால் தடுப்பவன்.நாம் கூறவந்தது இதுவல்ல.பௌத்தமும் அகத்தியர் என்ற தொன்மத்தை குறிப்பிடத் தக்கதாக கருதி இருக்கிறது என்பதைச் சுட்டவே.

அகத்தியருக்கும் தமிழுக்கும் பொதிகைமலைக்கும் உள்ள பிணைப்பு  பற்றி நிறைய தொன்மங்கள் உலவுகின்றன.ஆதியில் சிவன் வியாசரை சமக்ரிதத்தையும் அகத்தியரை தமிழ் மொழியையும் உருவாக்குமாறு பணித்து அனுப்பி வைத்தார் என்று புராணங்கள் கூறும்.தெற்கே வந்த அகஸ்தியருக்கு தமிழ்க் கடவுளான முருகனே தமிழைக் கற்பித்தான் என்பது இன்னொரு தொன்மம்.ஆகவே தெய்வத்தால் கற்பிக்கப் பட்டது என்ற தர்க்கப் படி தமிழும் தேவ பாஷையே.

அகத்தியருக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு சர்ச்சைக்குரியது.ஒரு ஆரியர் தமிழைத் தோற்றுவித்தார் என்பதை நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம்.ஆனால் இந்த தொன்மத்தை திரும்ப திரும்ப நாம் சந்திக்க நேரலாம்.தமிழில் கிடைத்த  ஆதி நூலை இயற்றிய தொல்காப்பியர் அகத்தியரின் சீடர் எனப் படுகிறது.ஆனால் தொல்காப்பியத்தில் ஒரு வரி கூட அகத்தியரைப் பற்றிக் கிடையாது!ஆனால் அதற்கும் ஒரு தொன்மம் காரணமாகச் சொல்லப்படுகிறது.தொல்காப்பியர் உட்பட்ட தனது சீடர்களுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால்தான் அவர் தனது குருவான அகத்தியரையும் அவர் எழுதிய அகத்தியத்தைப் பற்றியும் குறிப்பிடவில்லை என்று அந்த கதை சொல்கிறது.அகத்தியர் இது போல் சீடர்களுடன் முரணுவதில் பேர் பெற்றவரே.ஆனால் இதை வேறு கோணத்தில் அணுகலாம்.வியாசருக்கு முன்னால் வடமொழியோ அகத்தியருக்கு முன்னால் தமிழோ இல்லை  என்று இதற்கு பொருள் கொள்ளத் தேவை இல்லை. இன்றைய வடமொழியின் இலக்கணம் முழுதும் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாணினியால் எழுதப் பட்டுவிட்டது.இது போன்ற ஒரு இலக்கணத்தை அகத்தியர் செய்திருக்கலாம்.தமிழ் மொழி காலம் தோறும் நிறைய மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது.பெரியார் சமீபத்தில் செய்தது ஒரு சிறிய உதாரணம்.எழுத்து முறைகளில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கிறது என்பது உண்மையே.ஆனால் புணர்ச்சிவிதிகள் விகுதிகள் திணைகள் போன்ற அடிப்படை விதிகளில்  பெரிய மாற்றங்களைச் சந்தித்திருக்கிறதா என்பது கேள்வி.அது தேவையும் இல்லை.இவ்வாறு அடிப்படை விதிகளில் அடிக்கடி மாற்றம் செய்து கொண்டிருந்தால் மொழி அழிந்துவிடும் அபாயம் உண்டு.ஆகவே இது போன்ற இலக்கணங்களை வகுத்துக் கொடுத்தவர்களையே அம் மொழியை உருவாக்கியவர் எனச் சொல்லும் உயர்வு நவிற்சி கதைகள் உருவாகி இருக்கலாம்.அகத்தியர் -தொல்காப்பியர் -தமிழ் மொழியின் தோற்றம் என்ற  தொன்மத்தின் காரணம் இதுவாகவே இருக்கலாம்.

ஆனால்  அகத்தியர் பொதிகைக்கு வந்ததன் காரணம் மொழி மட்டுமல்ல.

Tuesday, August 3, 2010

மர்மயோகி அகத்தியர் 9

பரசுராமரைப் போலவே அகத்தியரும் நல்லதொரு போர்வீரர் என்று ராமாயணம் கூறுகிறது!துரோணரின் ஆசிரியர் அகத்தியர் என்றே சொல்லப்படுகிறது.தன்னைச் சந்திக்க வந்த ராமனிடம் தனக்கு விஷ்ணு வழங்கிய ஒரு வில்லை அகத்தியர் பரிசாக வழங்கினார்.
அகத்தியரைப் பற்றி பிரபலமாக வழங்கப் படும் கதை அவர் ஏன் தெற்கே வந்தார் என்ற கதை.இமய மலையில் சிவன் பார்வதி திருமணம் நடை பெற்ற போது வந்திருந்த விருந்தினர்க் கூட்டத்தின் சுமை தாங்காமல் வட கோடு தாழ்ந்து தென் கோடு உயர்ந்தது.அதைச் சமப் படுத்தவே அகஸ்தியரை சிவன் தெற்கே அனுப்பி வைக்கிறார்.இந்தக் கதையின் பின்னால் ஒரு புவியியல் வரலாறும் ஒளிந்திருக்கிறது .

நமது புவி காலந்தோறும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்திருக்கிறது.சமீபத்தில் ஏற்பட்ட ஆழிப் பேரலையைப் போல பல்வேறு ஊழிகளையும் மாற்றங்களையும் சந்தித்திருக்கிறது.முன்பிருந்த நிலப் பரப்புகள் இன்று கடலுக்கடியில் உள்ளன.கடலுக்க்கடியில் இருந்தவை நிலப் பரப்புகளாக உள்ளன.இந்த மாற்றங்கள் பற்றி விவிலியத்திலும் பல்வேறு நாட்டு புராணங்களிலும் நிறையப் பேசுகிறார்கள்.சில நாகரிகங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன .இவற்றைப் பற்றி பல வாய்மொழிக் கதைகள் உலவுகின்றன.அவற்றில் இரண்டு பெருங்கதைகள் உண்டு.ஒன்று நமது குமரிக் கண்டம்.மற்றதின் பெயர் அட்லாண்டிஸ்.[இது பற்றி ஒரு அமெரிக்க ரிஷியில் எழுதுகிறேன்.மிக சுவராஸ்யமான கதை அது]

குமரிக் கண்டம் ஒரு கட்டுக் கதையே என்பவர் உண்டு.தமிழருக்கு இயல்பிலேயே உள்ள தற்பெருமை உணர்வை மேடம் பிளாவட்ச்கியின் பிரம்மா ஞான சபையின் சில கருதுகோள்கள் விசிறிவிட்டதில் விளைந்த கற்பனை என்பார்கள்.இருக்கலாம்.இங்கு நாம் செய்வது ஆராய்ச்சி அல்ல.அகத்தியருடன் இணைந்து பேசப்படும் சில தொன்மங்களைப் பேசுகிறோம் அவ்வளவே.ஆனால் எந்த தொன்மமும் முழுமையாக கற்பனையில் இருந்து வந்துவிட முடியாது.

குமரிக்கண்டம் குமரி முதல் ஆஸ்திரேலியா வரை பரந்து கிடந்ததாக கருதப் படுகிறது.இன்றைய இலங்கையும் உள்ளடக்கி 49 மாநிலங்கள் இருந்தனவாம் அதில்.வடமதுரை என்பதுதான் இதன் முதல் தலைநகர்.இங்குதான் முதல் சங்கம் இருந்தது.இங்குதான் அகத்தியர் தனது அகத்தியம் எனும் நூலை இயற்றினார்.இந்த சங்கம் என்ற சொல் குறிப்பிடுவது தமிழ்ச் சபையைக் குறிப்பிடலாம்.அல்லது இன்று united states of america 51 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி அமைப்பாக இருப்பது போல ஒரு Federation of 49 states ஆகவும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.அதன் பொது மொழியாக தமிழ் இருந்திருக்கலாம்.

முதல் சங்கம் கடல் ஊழினால் அழிந்தது.அதை ஆண்ட பாண்டியர்கள் வடக்கே நகர்ந்து கபாடபுரம் வந்தார்கள்.கொஞ்சகாலத்தில் சிலப்பதிகாரம் சொல்வது போல மறுபடி கொடுங்கடல் கொள்ள கடலே வேண்டாம் சாமி என்று இன்றைய மதுரையைத் தேடிப் பிடித்தார்கள்.அகத்தியர் இன்னும் நகர்ந்து கடல் கோளோ பூமி அதிர்வோ வராத இடம் என்று தேடி இன்றைய பொதிகை மலை வந்து சேர்ந்தார்.இங்கு தென்காசி அருகே உள்ள தோரணவாயில் மலையில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார் என்கிறார்கள்.என்ன ஆராய்ச்சி?ஒருவேளை புவியியல் ஆராய்ச்சிக் கூடமாக இருக்கலாம்.

ஏன் என்று சொல்கிறேன்.நமது பூமியின் நிலப்பரப்பு ஒரே தட்டாக இல்லை.பல துண்டுகளாக ஒன்றோடு ஒன்று பொருந்தித்தான் இருக்கிறது.அவ்வாறு பொருந்தி இருக்கிற பிளவுக் கோடுகளில்தான் [faultlines]பெரும்பாலும் பூமி அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன.நமது தென்தமிழகத்தில் காணப் படும் ஒரு பிளவுக் கோடு தோரணமலை அடியாகவே செல்கிறது.அது தோரண மலைப் பிளவு என்றே அழைக்கப் படுகிறது.!ஆனாலும் இந்த பகுதியில் இதுவரை பூமி அதிர்ச்சிகள் பெரிய அளவில் ஏற்பட்ட்ட்டதே இல்லை.
சரி.அகத்தியர் தெற்கே வந்த கதைக்கு வருவோம்.இமய மலை ஒரு காலத்தில் கடலுக்குள்  இருந்தது .அறிவீர்களா.அதன் சிகரங்களில் திமிங்கலங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன!தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத் தொடர்கள் ,சஹாரா பாலைவனங்கள் இவை எல்லாம் கடலுக்குள் இருந்தவையே.இதே போல் பல நிலப் பரப்புகள் கடலுக்கு உள்ளே வெளியே வந்து போய் இருந்திருக்கின்றன. மிகச் சில பகுதிகள் மட்டுமே எப்போதும் புவியின் மேற்பரப்பிலேயே இருந்திருக்கின்றன.இவையே பூமியின் பழமையான நிலப் பரப்புகள்.இந்தியாவைப் பொறுத்தவரை விந்தியமலைக்குத் தெற்கே உள்ள தக்காண பீடபூமி பகுதிதான் அது.கோடு என்றால் மலை என்று பொருள்.இப்போது வடகோடு[இமயம்] தென்கோடு [விந்திய மலை]'உயர்ந்து இருக்கும் கதையின் பின்னால் உள்ள தத்துவம் புரிகிறதா..இந்த தக்காண பீடபூமியிலும் பொதிகைக்கு சிறப்பாக அகத்தியரும் பிற சித்தர்களும் ஏன் ஈர்க்கப் பட்டார்கள் என்று அடுத்து பார்க்கலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails