Monday, July 5, 2010

மர்ம யோகி அகத்தியர் 8

அகத்தியர்தான் ஆரிய கலாச்சாரத்தை முதல் முதலாய் திராவிடத்துக்கு கொண்டுவந்தார் என்ற குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருக்கக் கூடும்.நாம் தந்தை வழிச்  சமூகமாக இருப்பதற்கு முன்பு நெடுங்காலம் தாய் வழிச் சமூகமாகவே இருந்தோம்.அன்று நமது தெய்வங்களும் தாய்த் தெய்வங்களாகவே இருந்தன.கடவுள் மனிதனை தன் சாயலில் படைத்தானோ என்னவோ மனிதன் தன்  சாயலில் தான் கடவுளைப் படைத்தான்.ஒரு சமூகம்  வணங்கும் கடவுள்கள் அவர்களது கலாச்சாரத்தின் குறியீடாகவே இருக்கும்.

சிவனையும் விஷ்ணுவையும் வணங்கும் முன் நாம் இந்திரனையும் அக்னியையும்தான் வணங்கினோம்.இவர்கள் வேத கால கடவுள்கள்.ஆனால் அதற்கு முன்னால் நாம் சக்தி வழிபாட்டையே செய்து வந்தோம்.நமது சங்க நூல்களில் பழையோள் என்றே கொற்றவை[காளி]குறிப்பிடப் படுகிறாள்.

இங்கு மட்டுமல்ல,உலகெங்கும் தாய்த் தெய்வங்களே வழிபடப் பட்டன.இசிஸ்,அஸ்தார்த் போன்ற பெண்தெய்வங்களே எகிப்திலும் இஸ்ரேலிலும் மோசஸ் வருவதற்கு முன்பு வழிபடப்பட்டன.

ஆனால் தாய்வழிச் சமூகம் தந்தை வழிச் சமூகமாக மாறியபின்பு இந்த தெய்வங்கள் புறக்கணிக்கப் பட்டன.மேலும் இந்த பெண் தெய்வங்களை சாதாரண பொருட்களைக் கொடுத்து 'திருப்திப்' படுத்த முடியவில்லை.அவர்களுக்குச் செய்யும் சடங்குகளில் நிறைய காமமும் வன்முறையும் இருந்தன.மனிதர்கள் ஒரு சமூகமாக உருவாவதற்கு இந்த இரண்டையும் ஒழுங்கு படுத்த வேண்டிய அவசியம் இருந்தது.

செமிடிக் மதங்கள் உண்மையில் தாய்த் தெய்வங்களை சாத்தான் வழிபாடு என்று பயமுறுத்தி முழுக்கவே ஒழித்துக் கட்டிவிட்டன.அவர்களின்  தேவ லோகத்தில் ஒரு பெண் கடவுள் கூட கிடையாது.ஏன் ஒரு பெண் தீர்க்கதரிசி கூட கிடையாது.

ஆனால் இந்தியாவில் சக்தி வழிபாட்டை அத்தனை எளிதில்  ஒழிக்க முடியவில்லை.வேதங்களில் இந்திரனும் அக்னியும் தவிர ருத்திரனும் குறிப்பிடப் படுகிறான் எனினும் ஒரு பயத்தோடுதான் அவனைப் பற்றி பேசுகிறார்கள்.தேவர்களைப் போல் அவன் முழுக்க 'நாகரிக'மானவன் அல்ல.எப்போதும் சுடுகாட்டில் பூத கணங்களோடு திரிந்து கொண்டிருந்த அவனையும் சதா உயிர்ப் பலி வேண்டி நிற்கும் சக்தியையும் வேத முறைப் படி கல்யாணம் பண்ணி வைத்து 'சாந்தி' பண்ணினார்கள்.இந்த கல்யாணத்துக்கு தேவர்கள் அனைவரும் வந்திருந்ததும் இந்த சமயத்தில் தான் அகத்தியர் தெற்கே அனுப்பப் படுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

அகத்தியர் தெற்கே வந்ததும் அதே பாணியில் தான்தோன்றியாய் திரிந்து கொண்டிருந்த நிறைய உக்கிர தேவிகளைப் பிடித்து  கல்யாணம் பண்ணிவைத்து சாந்தப் படுத்தி வைத்தார்.தந்தை வழிச் சமூகத்தின் சின்னமான லிங்கங்களை எல்லா இடங்களிலும் ஸ்தாபித்தார்.தாந்திரிக வழிபாடு முறைகளான நரபலி போன்ற விசயங்கள் மென்மைப் படுத்தப் பட்டு தேங்காய் உடைப்பது குங்குமம் தருவது போன்ற குறியீட்டுச் சடங்குகளாக மாற்றப் பட்டன.தாந்திரீக சடங்குகளை முற்றிலும் புறக்கணித்து விடாமல் அதே சமயம் வேதத்திலும் முற்றிலும் விலகிவிடாமல் ஆகம முறைகள் உருவாகப் பட்டு  பயன் பாட்டுக்கு கொண்டு வரப் பட்டன.

இதே போல் ஒரு வேலையைத்தான் கேரளத்தில் பரசுராமரும் செய்தார் என்று நம்புவதற்கு இடம் இருக்கிறது.தமிழகத்தில் அகத்தியருக்கு இருக்கும் அதே இடம் கேரளத்தில் பரசுராமருக்கு இருக்கிறது.கேரளமே பரசுராம ஷேத்திரம் என்றுதான் அழைக்கப் படுகிறது.காடாக இருந்த கேரளத்தை நாடாக 'மாற்றியவர் 'என்று அவர் கருதப் படுகிறார்.அதேபோல் ராவணனுக்கும் தமிழ் மக்களுக்கும் உள்ள உறவை போல் மகாபலிக்கும் கேரள மக்களுக்கும் உள்ள உறவும் கூர்ந்து கவனிக்கத் தக்கது.

Saturday, July 3, 2010

ஒரு அமெரிக்க ரிஷி 1

தொண்ணூறுகளில் வாழ்வின் ஒவ்வொரு முகமும் பயமுறுத்த எந்த நிலத்திலும் காலற்று ஜெயமோகன் தனது கதைகளில் சொல்வதுபோல் சிறிய உடம்பும் பெரிய தலையுமாய் இலக்கற்று பெருங்காற்றில் அலையும் பாலிதீன் குப்பைபோல் திரிந்த நாட்கள் ஒன்றில் அந்த புத்தகம் கிடைத்தது.ஏறக்குறைய கிணற்றில் மூழ்க இருந்தவனுக்கு கடைசிக் கணத்தில் கிடைத்த கயிறு.அல்லது வீசப்பட்ட கயிறு.ஏறக் குறைய இருபது வருடங்கள் ஆகிவிட்டது.புரட்டிப் புரட்டிப் பழுப்பேறிப் போன பக்கங்களில் இருந்து இன்னமும் அவ்வப்போது ஏதோ ஒரு வெளிச்சம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.அது ஒரு வாழ்க்கை வரலாறு.காலத்துக்குப் பொருந்தாத ஒரு ஞானி [A seer out of season] என்ற அந்த நூல் Harmon Hartzell Bro என்பவர் எழுதியது.
புத்தகத்தின் நாயகன் பெயர் எட்கார் கேசி [Edgar Cayce].பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அமெரிக்கர்.அவர் வாழ்ந்த நாட்களில் ஆயிரக் கணக்கான மனிதர்களை நோயிலிருந்தும் மரணத்தில் இருந்தும் காப்பாற்றியவர் .ஆனால் அவர் ஒரு மருத்துவர் அல்ல.


உடலை மட்டும் அல்ல ,மனிதனின் மனத்தையும் ஆன்மாவையும் கூட அவரால் குணப் படுத்த முடிந்தது.ஆனால் அவர் ஒரு துறவியோ பாதிரியோ அல்ல. ஒரு தத்துவ ஞானியோ உளவியல் நிபுணரோ எழுத்தாளனோ கூட அல்ல.


சிலர் அவரை ஒரு மிஸ்டிக் என்றோ அதீத உணர்வாளர் [psychic] என்று சொல்லக் கூடும்.ஆனால் அவர் ஒரு ஆவி உலகத் தொடர்பாளர் அல்ல.[சில சமயங்களில் ஆவிகள் அவருடன் பேசியது உண்டு என்றாலும்]


நான் சிறு வயதிலிருந்தே கிறித்தவப் பள்ளிகளில் பயின்றவன்.என் சூழலிலும் கிறித்தவர்கள் அதிகம்.எனவே பிறப்பால் ஹிந்துவாய் இருந்தாலும் பண்டிகைகளில் பலகாரம் சாப்பிடுவது வரை தான் இந்திய மற்றும் இந்து சிந்தனைகளோடு பரிச்சயம்.ஆனால் விவிலியம் என்னோடு கூடவே இருந்தது.கிறித்து எனக்கு அணுக்கமான நபர். அன்று வாழ்வைப் பற்றிய எனது நோக்கு நிச்சயமாய் கிறித்துவத்தின் நோக்குதான்.நான் கிறித்துவனாக மதம் மாறாவிட்டால் கூட.
ஆனால் வயது ஏற ஏற அந்த நிச்சயம் குறைந்து கொண்டே வந்தது.எனக்குப் போதிக்கப் பட்ட கிறித்துவத்தில் நிறைய ஓட்டைகள் தெரிய ஆரம்பித்தன.இந்த சமயத்தில் தான் இந்து சிந்தனை  நோக்கி திரும்பினேன்.சித்பவனந்தாவின் கீதை விளக்க நூலை ஒரு இருபது தடவையாவது படித்திருப்பேன்.சில புதிர்கள் விடுபடுவது போல் தோன்றியது.இன்னும் படிக்க படிக்க இந்திய தத்துவம் கிறித்துவ சிந்தனையை விட ஆழமாக செல்வதை உணர முடிந்தது.


ஆனால் என்னால் கிறிஸ்து என்ற நபரை முழுக்க ஒதுக்க முடியவே இல்லை.எனக்கு இந்து தத்துவத்தில் இருந்த ஈர்ப்பு அதன்  சடங்குகளில் அத்தனை இல்லை.கிறிஸ்து தந்த இறை உணர்வை கிறித்துவம் தரவில்லை.கொஞ்ச நாள் இரண்டையும் விட்டு விட்டு நிரீச்வரவாதியாக அலைந்தேன்.ஜேகிருஷ்ணமூர்த்தி படித்துவிட்டு பேஸ்த் அடித்தவன் மாதிரி திரிந்தது நினைவு வருகிறது.பெரியார் சிந்தனைகளுடன் பரிச்சயம் இருந்தாலும் ஜேகேதான் அவரைவிட பெரிய நிராகரிப்பாளர் என தெரிந்தார்.


உலகில் பல்வேறு சிந்தனைப் போக்குகள் இருந்தாலும் அவை யாவும் இரண்டு மையப் பார்வையையே கொண்டிருக்கின்றன.ஒன்று நமது இந்திய சிந்தனைப் போக்கு.இந்து மதம்,சமணம்,பௌத்தம் எல்லாம் இதில் அடங்கும்.மற்றொன்று செமிடிக் எனப்படும் மத்தியக் கிழக்கில் தோன்றிய சிந்தனைப் போக்கு.யூத மதம்,கிறித்துவம்,இஸ்லாம் போன்ற மதங்கள் இந்தப் பிரிவில் வரும்.கிரேக்கச் சிந்தனை ,பேகன் [pagan] சிந்தனை மற்றும் சீன சிந்தனைப் போக்குகளும் உண்டு எனினும் அவை இந்த இரண்டு பெரிய சிந்தனைப் போக்குகளின் பாதிப்புகள் உள்ளவையே.


மேல்நோக்கில் இந்திய சித்தாந்தமும் செமிடிக் சித்தாந்தமும் முற்றிலும் எதிர் எதிர் நிலைகளில் நிற்பது போல் தோன்றும்.ஆனால் இந்த தோற்றம் மாயையே என்று எனக்கு மெதுமெதுவாக புரிய ஆரம்பித்தது.கிறித்துவும் கீதையும் ஒரே இடத்தில் இருக்க முடியாதா  என இந்த புத்தகம் மூலமே நான் சிந்திக்க ஆரம்பித்தேன்.


எட்கார் கேசியை வேத கால ரிஷிகளுடன் ஒப்பிடலாம் ரிஷி என்றால் பார்ப்பவன் என்று அர்த்தம்.[அதைத் தான் நாம் பாப்பான் ஆக்கிவிட்டோம்]நம் கண்ணுக்கு தெரிகிற காட்சிகளின் பின்னால் அசைகிற திரைகளை விலக்கிப் பார்க்கத் தெரிந்தவனே ரிஷி.பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிந்தவன்.ஆகவே தமிழ் இவனை அறிவன் என்று அழைக்கும்.


ஆனால் ரிஷிகளைப் போல் தவமோ யோகமோ செய்யவில்லை.[ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ளவரே எனினும்]திரைகள் அவருக்கு திறக்கப் பட்டன.பிரபஞ்சத்தின் அத்தனை ரகசியங்களும் அவருக்கு ஒவ்வொன்றாய் காட்டப் பட்டது.தீராத நோய்களைக் குணப் படுத்தினார்.மனிதர்களின் முந்தைய வாழ்க்கைகளைப் பற்றி சொன்னார்.காலம் மறைத்துவிட்ட சரித்திரங்களை  வெளிக் கொண்டுவந்தார்.ஆனால் எல்லாம் அவரது உறக்கத்தில்!
ஆம்.அமெரிக்கா அவரை தூங்கும் தீர்க்கதரிசி என்றுதான் அழைத்தது.


யார் இவர்?

LinkWithin

Related Posts with Thumbnails