Monday, May 24, 2010

தீரா இலக்கியம் 1 -சாமர்செட் மாம்

இந்த இடத்தில் என்னுடைய சுய ரசனை சார்ந்த வாசிப்பு அனுபவங்களை எழுதலாம் என நினைக்கிறேன் இங்கு நான் டால்ஸ்டாய் பற்றியோ தாஸ்தாவ்ஸ்கி பற்றியோ ஒரு நூறு வருடத் தனிமை பற்றியோ எழுதமாட்டேன் என்று சூடன் அணைத்து சத்தியம் செய்கிறேன்  நமது  புருவம்தூக்கி இலக்கியவாதிகள் அவர்களைப் பற்றி போதுமான அளவு புலம்பித் தீர்த்து விட்டார்கள் அதேசமயம் மில்ஸ்  அண்ட் பூன் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் பற்றியும் எழுதப் போவதில்லை நான் எழுதப் போவது சாமர்செட் மாம் தன்னையே வர்ணித்துக் கொண்டதுபோல் 'இரண்டாவது வகுப்பில்  முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் 'எழுத்தாளர்கள் பற்றி [என்னையும் நான் அப்படியே வர்ணித்துக் கொள்ளவே விரும்புவேன்]                                                                                                                                  
சாமர்செட் மாம் பற்றி நமது தமிழ் வெளியில் யாரும் அதிகம் எழுதியது இல்லை போல் தெரிகிறது சுஜாதா மெலிதாக ஏதோ சொல்லியிருந்தார் ஜெயமோகன் அவரது புகழ் பெற்ற நாவல் the razor 's edge பற்றி குறிப்பிட்டு இருந்தார்  அதிலும் அதை எழுதியவராக தாமஸ் மான் என்று தவறாக குறிப்பிட்டு இருந்தார் மாமை நாம் அதிகம் பொருட்படுத்தாதற்கு பல 'இலக்கிய' காரணங்கள் இருக்கக் கூடும் மாம் 'புரட்சி' எழுத்தாளர் அல்ல!எல்லோருக்கும் புரியும் படி வேறு எழுதினார்[என்ன ஒரு முட்டாள்த்தனம்!]கதை சொல்லும் முறையிலும் புரட்சி செய்யவில்லை நேரடியான கதை சொல்லி ஆனால் பெரும்பாலும் ஐரோப்பாவின் மேல்தட்டு மக்களின் அலட்டல்கள் பற்றியும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கடைசி நாட்கள் பற்றியும் எழுதினார் பூர்ஷ்வா எழுத்தாளர் என்று சிலர்  சொல்லலாம் ஆனால் அவர் கிப்ளிங் போல காலனி ஆதிக்கத்தை தூக்கி வைத்து எழுதவில்லை என்று சொல்லியே ஆகவேண்டும்                                                                                                        
மிக நேரிடையான கதை சொல்லல் முறை அவரது ஆனால் அவரது கதை மாந்தர்கள் அத்தனை நேரிடையானவர்கள்  அல்ல பிராய்டின் பாதிப்பு அவர் கதைகளில் உண்டு  மனிதர்களின் மேல் பாசாங்குகளின் அடியில் மறைந்து கிடக்கும் மாற்று முகங்கள் பற்றி அவருக்கு அதீத ஆர்வம் இருந்தது தெரிகிறது                                                                                                                                               மாம் பாரிசில் பிறந்த ஆங்கிலேயர் [1874 ]அம்மாவுக்கு காசநோய் இருந்தது அப்போது அது கொல்லும் வியாதி [இப்போதும்தான் என்பது அதிர்ச்சிகரமான செய்தி எய்ட்சை விட அதிகம்  பேரைக் கொன்று குவிக்கிறது] குழந்தை பெற்றால் நோய் தீரும் என்று ஒரு புத்திசாலி டாக்டர் சொல்லிவிட மாமின் தாயார் வருடத்துக்கு ஒன்றுக்கு என ஆறு குழந்தைகள் பெற்று ஆறாவது பிரசவத்தில் இறந்து போனார் மாம் மூன்றாவது குழந்தை தந்தையும் இரண்டு வருடங்களில் புற்று நோயில் இறந்துபோக அநாதை ஆனந்தன் ஆன மாம் இங்கிலாந்தில் மாமா வீட்டுக்கு அனுப்பப் பட்டார் மாமா வீரப்பன் வகையறா போதாது என்று பள்ளிக் கூடத்தில் ராகிங் வேறு அவரது பிரஞ்சு ஆங்கிலம் மெலிந்த உடல் திக்கு வாய் எல்லாம் பையன்களுக்கு கேக் சாப்பிட்டது போல் இருக்க மாம் மிகுந்த துன்பத்துக்கு உள்ளானார் of  human bondage  என்ற நாவலில் இந்த நாட்களை நரகம் என்று குறிப்பிட்டுள்ளார்                                                                                                                                                                        பள்ளி முடிந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்ச நாள் கிளார்க் வேலை பார்த்தார் மாமா விடவில்லை பாதிரியாராக  [அந்தக் காலத்தில் வேறு ஒன்றுக்கும் உபயோகம் இல்லாவிட்டால் பாதிரி வேலை நல்ல வாய்ப்பு!]போகலாம் என்றால் திக்கு வாய்  கர்த்தரை கூவி அழைக்க வேண்டிய வேலை ஆயிற்றே !கடைசியில் மருத்துவம் படிக்கப் போனார் அப்போது தான் தனது முதல் நாவல் Liza of Lambeth எழுதினார் பெரிய வெற்றி மேல்தட்டு மக்களிடம் இருந்த அடல்ட்ரி பற்றிய நாவல் அது அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம் தான் நிறைய நாவல்கள் நாடகங்கள் பிரயாணக் கட்டுரைகள் ...ஒரு கட்டத்தில் பிரிட்டனின் அதிகம் சம்பாதிக்கும் எழுத்தாளர்
                                                                                                                                  
        மாமின்  தனித்த அம்சமாக நான் கருதுவது அவர் மனிதர்களை கருப்பு வெளுப்பு ஆக பார்க்கவில்லை  என்பதே  ஆஷாட பூதிகளின் அடிமனதிலும்  கொந்தளிக்கும ஆசைகள் வக்கிரங்கள் வாய்ப்பு கிடைத்தால் குற்றம் செய்யும் இச்சை ஆகியவை ஒளிந்திருப்பதை  காண்பித்தார் அதேசமயம் ஒழுக்க ஏணியில் ஏறிக் கொண்டு அவர்களை கண்டிக்கவும் செய்யவில்லை [நித்தியானந்தர் நினைவுக்கு வருகிறாரா ]அதே போல் கெட்டவனாக  எல்லோரும்  கருதும் ஒருவன்  அந்த நேர உணர்ச்சியில் மிகப் பெரிய தியாகம் ஒன்றை செய்து விடலாம் எந்த மனிதனையும் முழுமையாக கணித்து விட முடியாது என்பதே அவரது செய்தி அவரது புகழ் பெற்ற நாவல்கள்     Moon and six pence மற்றும் Razor's edge இரண்டிலும் இந்த தீம் இருப்பதைக் காணலாம் Moon and six pence ஓவியர் பால் காகினின் [Paul Gaugin]கதை ஒரு சராசரி மேல்தட்டு நடுத்தரவாசிக்கான சுகவாசி வாழ்க்கையை குடும்பத்தை குழந்தைகளை  விட்டு விட்டு திடீர் என்று கதாநாயகன்  யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மறைந்து விடுகிறார் போன இடமும் காரணமும் தெரியாமல் எல்லாரும் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள் கடன் தொல்லையோ காதலோ காரணம் இல்லை  பசிபிக் தீவுகளுக்கு நாயகன் ஓடிப் போன காரணம் ஓவியம் வரைவதற்கு!அதுவரை அவருக்கு  கலை ஆர்வம் இருந்ததாகவே யாரும் அறிந்திருக்கவில்லை  எந்தப் பயிற்சியும் அதில் கிடையாது! ரொம்ப போரான ஆசாமி என தான் அதுவரை அறியப் பட்டார் போன இடமும் சொர்க்க பூமி என்று சொல்ல முடியாது மலேரியாவும் தொழுநோயும் சல்லிசாய்க் கிடைக்கும் தாஹிதி தீவுகள் அங்கு ஒரு குடிசையில் தங்கிக் கொண்டு ஓவியம் வரையக் கற்றுக் கொண்டு [ஆமாம் கற்றுக் கொண்டு!]வரைந்து தள்ளுகிறார்  கடைசியில் தொழு நோய் வந்து கைவிரல்கள் எல்லாம் உதிர்ந்து போன நிலையிலும் குடிசையின் சுவர்களில் எல்லாம் வரைந்து கொண்டே இறந்து போனார்  இது உண்மையான ஒரு மனிதனின் வாழ்க்கை என்று சொல்லா விடில் இதை நம்புவது மிகச் சிரமமாக இருக்கக் கூடும்    
                                                                                                      
காகினின் ஓவியங்கள் இன்று கோடிக் கணக்கான டாலருக்கு விலை போகின்றன ஆனால் அவர்  வாழ்நாளில் அவரைச்  சீண்டுவார் இல்லை அவரும் அதற்கு கவலைப் பட்டாற்போல் தெரியவில்லை ஆனால் சரித்திரம் முழுக்க தான் நம்புகிற ஒரு விசயத்துக்காக உணர்வுக்காக [கலை, இசை, கடவுள், சமூக மாற்றம் எது வேண்டுமானாலும் இருக்கலாம்]தனது முழு வாழ்வையும் பணயம் வைத்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களை எது செலுத்துகிறது?முழுச் செவிடான பிறகும் பீத்தோவான் இசை அமைத்துக் கொண்டே இருந்தார் கண் பார்வை மிகக் குறைந்த நிலையிலும் பூதக் கண்ணாடிகளுடன் க நா சு படித்துக் கொண்டே இருந்தார் Moon and six pence மனிதனுக்குள் இருக்கும் இந்த தர்க்கத்துக்கு உட்படாத விசையைப் பற்றிப் பேசுகிறது மனிதன் முழுக்க தர்க்கத்தால் ஆனவன் அல்ல 
                                                                                                                                      
Razor's edge ன் லேரி இதே போல் ஒரு மனிதனே தனது காதல் ஒரு பாதுகாப்பான வாழ்க்கை இவற்றை எல்லாம் விட்டுவிட்டு ஞானம் தேடி ஐரோப்பா முழுதும் அலைகிறான் கடைசியில் இந்தியா வருகிறான் தேடியது கிடைக்கிறது மீண்டும் பாரிசில் தனது பழைய காதலியை சந்திக்கிறான் ஆனால் ஒரு வழிதவறிய போதைக்கு அடிமையான தனது பால்ய சினேகிதியை திருமணம் செய்யும் நாள் அன்று அவள் ஓடிவிட கையில்  உள்ள காசை எல்லாம் தானம் செய்து விட்டு இந்திய ஞானிகள் போல் கடவுளை மட்டு நம்பி அமெரிக்காவுக்கு புறப்படுகிறான் கஞ்சன்காடு பாப்பா ராமதாஸ் கையில் ஒரு பைசா இல்லாமல் இந்தியா முழுக்க சுற்றித் திரிந்தார் காசு கிடைத்தாலும் தூக்கி எறிந்து விடுவார் ஆனால்  சில சிறிய சோதனைகளைத் தவிர வழி   முழுவதும் அவரது கடவுள் ராம் உணவும் இருப்பிடமும் அளித்தான் இன்று இந்தியாவில் கூட அவ்வாறு திரிய முடியாது சாமியார்களும் அவர்கள் வணங்கும் ராமனும் மிகுந்த சந்தேகத்துக்கு உரியவர்களாக மாறி விட்டனர் அமெரிக்காவில் இது சாத்தியமே இல்லை இந்த இருவருமே வாய்ப்பு இருந்தும் ஒரு கடின வாழ்க்கையை வேண்டும் என்றே தேர்ந்து எடுக்கின்றனர் ஆனால் அதை சந்தோசமாகவே செய்கின்றனர்
                                                                    
    தனிப்பட்ட வாழ்வில் மாம் கூட சர்ச்சைக்கு உரியவராக தான் இருந்தார் மாம் இருபால் உறவினர் ஒபியம் புகைப்பவர் தனது மகள் தனக்கு பிறந்தவள் அல்ல என்று எழுதினார்!கொஞ்ச காலம் பிரிட்டிஷ்  உளவாளியாக இருந்தார் அவரது கதைகள் திரும்பத் திரும்ப படம் ஆக்கப் பட்டுள்ளன பெட்டி டேவிஸ் நடித்த The letter  சிறந்த ஒன்று டிவியில் டைனோசொர்கள் உலவாத மதியங்களில் சிலசமயம் பார்க்க நேர்ந்தால் தவறவிடாதீர்கள்

1 comment:

soundar said...

நல்ல பதிவு

LinkWithin

Related Posts with Thumbnails