Friday, May 28, 2010

மர்ம யோகி அகத்தியர் 5

சித்தர்கள் பற்றிய வரலாறு  ஒரு இடியாப்பச் சிக்கலாக இருப்பதன் காரணம் ,நமது ஆட்களின்  எதையும் ஆவணப் படுத்தி வைக்காத தன்மையே.இது தமிழரின் குணம் மட்டுமல்ல,இந்தியரின் தேசிய குணம் இன்று ஏற்படுகிற நிறைய அரசியல் குழப்பங்களுக்கும் தவறான புரிதல்களுக்கும் இந்த அலட்சியப் போக்கே காரணம்.இரண்டு மாவட்டங்களை ஆண்டவர்கள் கூட தங்களை திரிபுவனச் சக்கரவர்த்தி என்று கல்வெட்டுகளில் பொறித்துக் கொள்வது இந்திய வரலாற்றில்  நிகழ்ந்து இருக்கிறது.ஒரே போரில் இரண்டு மன்னர்களும் வென்றதாக இரண்டு வெவ்வேறு கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன!இந்த குழப்பம் போதாது என்று பின்னால் வந்தவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப இந்திய தமிழக வரலாற்றில் கைவைத்திருக்கிறார்கள்.ஒன்றும் பெரிய சிரமம் இல்லை. சித்தர் பாடல்கள் பெரும்பாலும் எளிதான தமிழிலேயே உள்ளன.[ஆனால் கடினமான இன்னொரு அர்த்தம் தரும் உள்குத்தும்  இருக்கலாம்]ஆகவே இடைச்செருகல் செய்வது எளிது.செய்திருக்கிறார்கள்.ஆங்கிலேயரோடு வந்த பாதிரிகள் இதில் நிறைய' சேவை ''செய்திருக்கிறார்கள்.ரொம்ப 'திருத்த'  முடியாத நூல்களை பொட்டலம் கட்டி தங்கள் நாடுகளுக்கு அனுப்பிவிட்டார்கள்.அவர்களுக்கு தெரியும்  நமது வரலாற்று உணர்வு பற்றி.தமிழ் தமிழ் என்று கத்துவோமே தவிர இந்த நூல்களை எல்லாம் தேட மாட்டோம் என்று.நாம் இதுவரை தேடவில்லை.இன்னமும் அவை ஐரோப்பா ம்யுசியங்களில் தூங்குகின்றன .

சங்க இலக்கியத்தில் சித்தர் என்ற வார்த்தையே இல்லை.நிகண்டுகளிலும் காணப்படவில்லை.வேதங்களிலும் ரிஷிகள்தான் வருகிறார்கள் தவிர சித்தர்களைக் காணோம் .ஸ்வேதா ஆரண்ய உபநிஷத்தில் சித்தன் என்ற வார்த்தை உள்ளதாக துப்பறிந்து இருக்கிறார்கள்.அறிவன் என்ற தமிழ் சொல் சித்தர்களைக் குறிக்கலாம் என்று கருதப் படுகிறது.அப்படியானால் திருமூலர் வருடத்துக்கு ஒன்றாய் திருமந்திரம் மூவாயிரம் எழுதினார் என்பதை எல்லாம் எப்படி புரிந்து கொள்வது?
சித்தர்களில் பலபேர் தமிழர்கள் கிடையாது.ஆனால் தமிழில்தான் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள்.அகத்தியர்,போகர் தவிர புலிப்பாணி மங்கோலியர்  .கோரக்கர் வட இந்தியர் .[அகத்தியரைப் போலவே இவருக்கும் வட இந்தியாவில் கோயில்கள் உண்டு.கோரக்பூர் என்று ஊரே உண்டு.கஞ்சா இவர் கண்டுபிடித்ததுதான்!சித்தர்கள் பாஷையில் கோரக்க மூலி என்றே அதைச் சொல்லுவார்கள்.]திருமூலரும் வட இந்தியரே .காச்மீரத்தில் இருந்து தமிழகம் வந்தவர்.வந்த காரணமே அகத்தியரைத் தேடித்தான்.வந்த இடத்தில் என்ன என்னவோ ஆகி கூடுவிட்டு கூடு பாய்ந்து திரு மந்திரம் படைத்தார்.கூடு மாறிய இடம் திருவாவடுதுறை. சமீபத்தில் திருவாவடுதுறை ஆதீனம் திருமந்திரத்தின் பத்தாம் தந்திரத்தை வெளியிட்டிருக்கிற விஷயம் தமிழ் ஊடகங்களில் எங்கும் வராதது நம் தமிழ் ஆர்வத்திற்கு ஒரு சான்று.[மச்சான்ஸ்,மானாட மயிலாட மறந்துராதீங்க]திருமந்திரத்துக்கு இதுவரை ஒன்பது தந்திரங்கள்தான் அறியப் பட்டிருக்கிறது.திருமந்திரத்தில் காச்மீரச் சைவச்சித்தாந்தக் கூறுகளை அதிகம் காணலாம் .ஆறு ஆதாரங்கள்,தாந்திரீக யோகம்ஆகியவை காச்மீர சைவக் கூறுகளே.காச்மீருக்கும் சீனாவும் திபெத்தும் நிறைய சித்தாந்தக்  கொடுக்கல் வாங்கல்கள் இருந்தன.
நம்மைப் போல் அல்லாது எதையும் சரியாக ஆவணப் படுத்தி வைக்கும் வழக்கம் சீனர்களிடம் இருந்தது.3000BC யில் இருந்தே பாப்பிரஸ் தாள்களில் வரிசையாக தங்கள் வரலாற்றைப் பதிவு செய்து வந்திருக்கிறார்கள்.
ரொம்ப நாள் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு நிறைய இருந்தது,மறுபிறவி,மரணத்தின் பின் வாழ்க்கை பற்றியெல்லாம் அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை.அதற்காக  பயிற்சிகளையும் மருந்துகளையும் தேடிக் கொண்டே இருந்தார்கள்.மூத்திரத்தைக் குடித்தார்கள்.பாதரசத்தை [கடும் விஷம்]பாடம் பண்ணி சாப்பிட்டு சாகிறோமா இல்லையா என்றெல்லாம் பரிசோதனை பண்ணிப் பார்த்தார்கள் நம்முடைய சித்தர்களிடமும் இந்த நோக்கைக் காணலாம்.மற்றவர்கள் எல்லாம்  மீண்டும் பிறவா வரம் கேட்டுக் கொண்டிருக்க சித்தர்கள் மரணம் இல்லா பெருவாழ்வுக்காக பரிசோதனை பண்ணிக் கொண்டிருந்தார்கள்.சீனர்கள் வைத்தியத்திலும் பெரு ஆர்வம் காட்டினார்கள்.அக்கு பங்க்சர் வர்மம் இரண்டுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் காணப் படுகின்றன.ரசவாதத்திலும் வல்லவர்கள்'
ரசம் என்றால் பாதரசம் சாதரண நிலையில் கடும் விசமாக உள்ள இந்த பொருள் சரியான முறையில் பாடம்  செய்யப்பட்டால் நிறைய நோய்களை தீர்க்கும்.ஏன் மரணமில்லா பெருவாழ்வையே அளிக்கக் கூடும் என்று நம்பினார்கள் சித்த மருத்துவத்தில் இன்று எய்ட்சுக்கு தரும் மருந்து பாதரசம் சார்ந்ததே.சித்தமருத்துவத்தில் பாதரசம் தவிர்க்க முடியாத பொருள்.ஆனால் பாதரசம் இந்தியாவில் எங்கும் கிடைக்காது!பிறகு எங்கிருந்து பாதரசம் வந்தது?சீனத்த்தில் இருந்தது தான்.காவலுக்கு இருந்த 'அரக்கர்கள்'கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு சீனாவில் உள்ள பாதரசக் கிணற்றில் இருந்து ரசத்தைக்  கடத்திய கதையை போகர்  தன் நூலில் பதிவு செய்திருக்கிறார்..

Tuesday, May 25, 2010

மர்ம யோகி அகத்தியர் 4

ராவண புராணத்தை முடித்துவிடலாம்.ராவணன் பல விசயங்களில் விற்பன்னன் ஆனால் பெண்கள் விசயத்தில் ரொம்ப வீக் என்று புராணங்கள் சொல்கின்றன.அவன் பல வரங்கள் பெற்றிருந்தாலும்  குறைந்தது 18  சாபங்களாவது அவனது பத்து  தலை மேல் இருந்தது பெரும்பாலும் பெண் சமாச்சாரங்களால் கொடுக்கப் பாட்ட சாபங்கள் ஒரு முனிவரின் கண் முன்னாலேயே அவர் மனைவிக்கு 'மவுத் கிஸ்' கொடுத்துப் பெற்றுக் கொண்டது ஒரு சாம்பிள். சூர்ப்பனகைக்காக பழி வாங்கத்தான் சீதையை தூக்கிப் போனான் என்பது அத்தனை நம்ப முடியவில்லை [ஒரு கொசுறு செய்தி சூர்ப்பனகையின் இன்னொரு பெயர் மீனாட்சி!]அவன் பெற்றுக் கொண்ட சாபங்களில் ஒன்று விருப்பமில்லாத பெண்ணைத் தொட்டால் தலை சிதறிப் போகும் என்பது அதனாலேயே அவன் சீதையிடம் பொறுமை காத்தான் என்பார்கள் [இன்னொன்று அவன் கண் முன்னாலேயே வானரங்களால் அவன் மனைவி துயில் உறியப் படுவாள் என்பது] அவனிடமிருந்து சீதையை மீட்டு ராமன் அயோத்திக்கு மீண்டபோது கூடவே ஒரு பெரும் ஊர்வலம் சென்றது அதில் அகத்தியரும் இருந்தார்
                                                                           அகத்தியரின் தோற்றம் பற்றிய கதை கொஞ்சம் அடல்ட்ஸ் ஒன்லி கதை அவர் நேரிடையாக ஒரு பெண் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை ஒரு குடத்திலிருந்து பிறந்தார் .ஆகவேதான் அவர் பெயர் கும்பமுனி என்பார்கள்.ஆனால் அவர் மட்டுமே கும்பத்தில் இருந்து பிறக்கவில்லை வசிட்டரும் அவ்விதமே பிறந்தார் .அவரையும் நாம் கும்பமுனி என்றே அழைக்கலாம் அந்த வகையில்  உலக வரலாற்றிலேயே முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை என்று அவரைக் கூறலாம். இதேபோல் ஐரோப்பாவில்  பரசெல்சஸ்[Paracelsus] என்ற ரசவாதி [இவரும் ஒரு  மர்ம யோகியே]17 ம் நூற்றாண்டில் ஒரு சோதனைக் குழாய்க் குழந்தையை உருவாக்கியதாகச் சொல்லப் படுகிறது. இது போல் வினோதமான கர்ப்பங்கள் பற்றிய குறிப்புகள் புராணங்களில் நிறைய காணப் படுகின்றன.கன்னிப் பிறப்பு ஹிந்து மதத்துக்கு புதிதான விசயமே அல்ல. அது தவிர ஒரேநாளில் கருவுற்று குழந்தை பிறந்ததும் சொல்லலப் படுகிறது ரிஷி கர்ப்பம் ராத் தங்காது என்பார்கள் .ஆனால் அதற்கு நேர் எதிராக லோபாமுத்திரை [அகத்தியர் பத்தினி ]அவர்  மகனை ஏழு வருடங்கள்  கருத்தாங்கி பெற்றார்!
                                                                                                       அகத்தியரின் இன்னொரு பெயர் குறுமுனி என்பது.அவரது உயரக் குறைவு குறித்த பட்டம் இது.இதன் காரணமாவே அகத்தியரை சீனர் என்று சந்தேகப் படுவோர் உண்டு தென் கிழக்கு ஆசிய  நாடுகள் சிலவற்றில் அகத்தியரை சீனராக கருதும் கதைகள் உலவுகின்றன
                                                                                               இது ஒன்றும் ஆச்சர்யமான செய்தி இல்லை. சித்தர்களில் பலர் தமிழர் இல்லை போகர் சீனர் என்பது தெரியும் போன்க் யாங் என்று சீனாவில் அவர் பெயரில் நூல்கள் உள்ளன புலிப்பாணி மங்கோலியர் புலஸ்தியர் சிங்களர் [ராவணனது தாத்தா பெயரும் புலஸ்தியர் என்பது குறிப்பிடத் தக்கது ]இத்தனை பெரும் ஏன் அவ்வளவு தொலைவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வரவேண்டும்?காரணம் இல்லாமல் இல்லை அதற்குமுன் சித்தர்களுக்கும் சீனத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி பார்த்துவிடுவோம்
                                 

Monday, May 24, 2010

தீரா இலக்கியம் 1 -சாமர்செட் மாம்

இந்த இடத்தில் என்னுடைய சுய ரசனை சார்ந்த வாசிப்பு அனுபவங்களை எழுதலாம் என நினைக்கிறேன் இங்கு நான் டால்ஸ்டாய் பற்றியோ தாஸ்தாவ்ஸ்கி பற்றியோ ஒரு நூறு வருடத் தனிமை பற்றியோ எழுதமாட்டேன் என்று சூடன் அணைத்து சத்தியம் செய்கிறேன்  நமது  புருவம்தூக்கி இலக்கியவாதிகள் அவர்களைப் பற்றி போதுமான அளவு புலம்பித் தீர்த்து விட்டார்கள் அதேசமயம் மில்ஸ்  அண்ட் பூன் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் பற்றியும் எழுதப் போவதில்லை நான் எழுதப் போவது சாமர்செட் மாம் தன்னையே வர்ணித்துக் கொண்டதுபோல் 'இரண்டாவது வகுப்பில்  முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் 'எழுத்தாளர்கள் பற்றி [என்னையும் நான் அப்படியே வர்ணித்துக் கொள்ளவே விரும்புவேன்]                                                                                                                                  
சாமர்செட் மாம் பற்றி நமது தமிழ் வெளியில் யாரும் அதிகம் எழுதியது இல்லை போல் தெரிகிறது சுஜாதா மெலிதாக ஏதோ சொல்லியிருந்தார் ஜெயமோகன் அவரது புகழ் பெற்ற நாவல் the razor 's edge பற்றி குறிப்பிட்டு இருந்தார்  அதிலும் அதை எழுதியவராக தாமஸ் மான் என்று தவறாக குறிப்பிட்டு இருந்தார் மாமை நாம் அதிகம் பொருட்படுத்தாதற்கு பல 'இலக்கிய' காரணங்கள் இருக்கக் கூடும் மாம் 'புரட்சி' எழுத்தாளர் அல்ல!எல்லோருக்கும் புரியும் படி வேறு எழுதினார்[என்ன ஒரு முட்டாள்த்தனம்!]கதை சொல்லும் முறையிலும் புரட்சி செய்யவில்லை நேரடியான கதை சொல்லி ஆனால் பெரும்பாலும் ஐரோப்பாவின் மேல்தட்டு மக்களின் அலட்டல்கள் பற்றியும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கடைசி நாட்கள் பற்றியும் எழுதினார் பூர்ஷ்வா எழுத்தாளர் என்று சிலர்  சொல்லலாம் ஆனால் அவர் கிப்ளிங் போல காலனி ஆதிக்கத்தை தூக்கி வைத்து எழுதவில்லை என்று சொல்லியே ஆகவேண்டும்                                                                                                        
மிக நேரிடையான கதை சொல்லல் முறை அவரது ஆனால் அவரது கதை மாந்தர்கள் அத்தனை நேரிடையானவர்கள்  அல்ல பிராய்டின் பாதிப்பு அவர் கதைகளில் உண்டு  மனிதர்களின் மேல் பாசாங்குகளின் அடியில் மறைந்து கிடக்கும் மாற்று முகங்கள் பற்றி அவருக்கு அதீத ஆர்வம் இருந்தது தெரிகிறது                                                                                                                                               மாம் பாரிசில் பிறந்த ஆங்கிலேயர் [1874 ]அம்மாவுக்கு காசநோய் இருந்தது அப்போது அது கொல்லும் வியாதி [இப்போதும்தான் என்பது அதிர்ச்சிகரமான செய்தி எய்ட்சை விட அதிகம்  பேரைக் கொன்று குவிக்கிறது] குழந்தை பெற்றால் நோய் தீரும் என்று ஒரு புத்திசாலி டாக்டர் சொல்லிவிட மாமின் தாயார் வருடத்துக்கு ஒன்றுக்கு என ஆறு குழந்தைகள் பெற்று ஆறாவது பிரசவத்தில் இறந்து போனார் மாம் மூன்றாவது குழந்தை தந்தையும் இரண்டு வருடங்களில் புற்று நோயில் இறந்துபோக அநாதை ஆனந்தன் ஆன மாம் இங்கிலாந்தில் மாமா வீட்டுக்கு அனுப்பப் பட்டார் மாமா வீரப்பன் வகையறா போதாது என்று பள்ளிக் கூடத்தில் ராகிங் வேறு அவரது பிரஞ்சு ஆங்கிலம் மெலிந்த உடல் திக்கு வாய் எல்லாம் பையன்களுக்கு கேக் சாப்பிட்டது போல் இருக்க மாம் மிகுந்த துன்பத்துக்கு உள்ளானார் of  human bondage  என்ற நாவலில் இந்த நாட்களை நரகம் என்று குறிப்பிட்டுள்ளார்                                                                                                                                                                        பள்ளி முடிந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்ச நாள் கிளார்க் வேலை பார்த்தார் மாமா விடவில்லை பாதிரியாராக  [அந்தக் காலத்தில் வேறு ஒன்றுக்கும் உபயோகம் இல்லாவிட்டால் பாதிரி வேலை நல்ல வாய்ப்பு!]போகலாம் என்றால் திக்கு வாய்  கர்த்தரை கூவி அழைக்க வேண்டிய வேலை ஆயிற்றே !கடைசியில் மருத்துவம் படிக்கப் போனார் அப்போது தான் தனது முதல் நாவல் Liza of Lambeth எழுதினார் பெரிய வெற்றி மேல்தட்டு மக்களிடம் இருந்த அடல்ட்ரி பற்றிய நாவல் அது அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம் தான் நிறைய நாவல்கள் நாடகங்கள் பிரயாணக் கட்டுரைகள் ...ஒரு கட்டத்தில் பிரிட்டனின் அதிகம் சம்பாதிக்கும் எழுத்தாளர்
                                                                                                                                  
        மாமின்  தனித்த அம்சமாக நான் கருதுவது அவர் மனிதர்களை கருப்பு வெளுப்பு ஆக பார்க்கவில்லை  என்பதே  ஆஷாட பூதிகளின் அடிமனதிலும்  கொந்தளிக்கும ஆசைகள் வக்கிரங்கள் வாய்ப்பு கிடைத்தால் குற்றம் செய்யும் இச்சை ஆகியவை ஒளிந்திருப்பதை  காண்பித்தார் அதேசமயம் ஒழுக்க ஏணியில் ஏறிக் கொண்டு அவர்களை கண்டிக்கவும் செய்யவில்லை [நித்தியானந்தர் நினைவுக்கு வருகிறாரா ]அதே போல் கெட்டவனாக  எல்லோரும்  கருதும் ஒருவன்  அந்த நேர உணர்ச்சியில் மிகப் பெரிய தியாகம் ஒன்றை செய்து விடலாம் எந்த மனிதனையும் முழுமையாக கணித்து விட முடியாது என்பதே அவரது செய்தி அவரது புகழ் பெற்ற நாவல்கள்     Moon and six pence மற்றும் Razor's edge இரண்டிலும் இந்த தீம் இருப்பதைக் காணலாம் Moon and six pence ஓவியர் பால் காகினின் [Paul Gaugin]கதை ஒரு சராசரி மேல்தட்டு நடுத்தரவாசிக்கான சுகவாசி வாழ்க்கையை குடும்பத்தை குழந்தைகளை  விட்டு விட்டு திடீர் என்று கதாநாயகன்  யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மறைந்து விடுகிறார் போன இடமும் காரணமும் தெரியாமல் எல்லாரும் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள் கடன் தொல்லையோ காதலோ காரணம் இல்லை  பசிபிக் தீவுகளுக்கு நாயகன் ஓடிப் போன காரணம் ஓவியம் வரைவதற்கு!அதுவரை அவருக்கு  கலை ஆர்வம் இருந்ததாகவே யாரும் அறிந்திருக்கவில்லை  எந்தப் பயிற்சியும் அதில் கிடையாது! ரொம்ப போரான ஆசாமி என தான் அதுவரை அறியப் பட்டார் போன இடமும் சொர்க்க பூமி என்று சொல்ல முடியாது மலேரியாவும் தொழுநோயும் சல்லிசாய்க் கிடைக்கும் தாஹிதி தீவுகள் அங்கு ஒரு குடிசையில் தங்கிக் கொண்டு ஓவியம் வரையக் கற்றுக் கொண்டு [ஆமாம் கற்றுக் கொண்டு!]வரைந்து தள்ளுகிறார்  கடைசியில் தொழு நோய் வந்து கைவிரல்கள் எல்லாம் உதிர்ந்து போன நிலையிலும் குடிசையின் சுவர்களில் எல்லாம் வரைந்து கொண்டே இறந்து போனார்  இது உண்மையான ஒரு மனிதனின் வாழ்க்கை என்று சொல்லா விடில் இதை நம்புவது மிகச் சிரமமாக இருக்கக் கூடும்    
                                                                                                      
காகினின் ஓவியங்கள் இன்று கோடிக் கணக்கான டாலருக்கு விலை போகின்றன ஆனால் அவர்  வாழ்நாளில் அவரைச்  சீண்டுவார் இல்லை அவரும் அதற்கு கவலைப் பட்டாற்போல் தெரியவில்லை ஆனால் சரித்திரம் முழுக்க தான் நம்புகிற ஒரு விசயத்துக்காக உணர்வுக்காக [கலை, இசை, கடவுள், சமூக மாற்றம் எது வேண்டுமானாலும் இருக்கலாம்]தனது முழு வாழ்வையும் பணயம் வைத்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களை எது செலுத்துகிறது?முழுச் செவிடான பிறகும் பீத்தோவான் இசை அமைத்துக் கொண்டே இருந்தார் கண் பார்வை மிகக் குறைந்த நிலையிலும் பூதக் கண்ணாடிகளுடன் க நா சு படித்துக் கொண்டே இருந்தார் Moon and six pence மனிதனுக்குள் இருக்கும் இந்த தர்க்கத்துக்கு உட்படாத விசையைப் பற்றிப் பேசுகிறது மனிதன் முழுக்க தர்க்கத்தால் ஆனவன் அல்ல 
                                                                                                                                      
Razor's edge ன் லேரி இதே போல் ஒரு மனிதனே தனது காதல் ஒரு பாதுகாப்பான வாழ்க்கை இவற்றை எல்லாம் விட்டுவிட்டு ஞானம் தேடி ஐரோப்பா முழுதும் அலைகிறான் கடைசியில் இந்தியா வருகிறான் தேடியது கிடைக்கிறது மீண்டும் பாரிசில் தனது பழைய காதலியை சந்திக்கிறான் ஆனால் ஒரு வழிதவறிய போதைக்கு அடிமையான தனது பால்ய சினேகிதியை திருமணம் செய்யும் நாள் அன்று அவள் ஓடிவிட கையில்  உள்ள காசை எல்லாம் தானம் செய்து விட்டு இந்திய ஞானிகள் போல் கடவுளை மட்டு நம்பி அமெரிக்காவுக்கு புறப்படுகிறான் கஞ்சன்காடு பாப்பா ராமதாஸ் கையில் ஒரு பைசா இல்லாமல் இந்தியா முழுக்க சுற்றித் திரிந்தார் காசு கிடைத்தாலும் தூக்கி எறிந்து விடுவார் ஆனால்  சில சிறிய சோதனைகளைத் தவிர வழி   முழுவதும் அவரது கடவுள் ராம் உணவும் இருப்பிடமும் அளித்தான் இன்று இந்தியாவில் கூட அவ்வாறு திரிய முடியாது சாமியார்களும் அவர்கள் வணங்கும் ராமனும் மிகுந்த சந்தேகத்துக்கு உரியவர்களாக மாறி விட்டனர் அமெரிக்காவில் இது சாத்தியமே இல்லை இந்த இருவருமே வாய்ப்பு இருந்தும் ஒரு கடின வாழ்க்கையை வேண்டும் என்றே தேர்ந்து எடுக்கின்றனர் ஆனால் அதை சந்தோசமாகவே செய்கின்றனர்
                                                                    
    தனிப்பட்ட வாழ்வில் மாம் கூட சர்ச்சைக்கு உரியவராக தான் இருந்தார் மாம் இருபால் உறவினர் ஒபியம் புகைப்பவர் தனது மகள் தனக்கு பிறந்தவள் அல்ல என்று எழுதினார்!கொஞ்ச காலம் பிரிட்டிஷ்  உளவாளியாக இருந்தார் அவரது கதைகள் திரும்பத் திரும்ப படம் ஆக்கப் பட்டுள்ளன பெட்டி டேவிஸ் நடித்த The letter  சிறந்த ஒன்று டிவியில் டைனோசொர்கள் உலவாத மதியங்களில் சிலசமயம் பார்க்க நேர்ந்தால் தவறவிடாதீர்கள்

Friday, May 21, 2010

மர்ம யோகி அகத்தியர் 3

அகத்தியருக்கும் ராவணனுக்கும் உள்ள தொடர்புகளை இன்னும் சற்று பார்க்கலாம் பிரபஞ்சசாரம் என்ற ஓலைச் சுவடி கூற்றுப் படி அகத்தியர் பிறந்து ஏறத்தாழ 9000 வருடங்கள் ஆகிறது ராமன் அகத்தியர் ராவணன் ஆகிய மூவரும் சம காலத்தவர் ஒருவரை ஒருவர் சந்தித்து உள்ளனர் ஆகவே ராமாயணம் நடந்ததும் 9000 ஆண்டுகளுக்கு முன்பு தான் நம்முடைய சரித்திர ஆய்வாளர்கள் இந்த காலக் கணக்கை  ஒத்துக் கொள்வார்களா   தெரியாது                                                                                                                                    ராவணனின்தாத்தா புலஸ்தியர் சப்த ரிஷிகளில் ஒருவர் அகத்தியரும் சப்தரிஷிகளில் ஒருவரே ராவணன் வீணையில் வித்தகன் என்பது பிரசித்தம் அவனது கொடியில் சின்னமாக வீணைதான் இருந்தது வீணை வாசித்துதான் அவன் சிவனை மயக்கி பலவரங்களைப் பெற்றான் அப்படிப் பட்ட ராவணனை அகத்தியர் வீணைப் போட்டியில் தோற்கடித்து இருக்கிறார் ராவணன் ஆண்டது இலங்கையை மட்டுமல்ல சுனாமி வந்து அழிப்பதற்கு முன்பிருந்த குமரிக் கண்டத்தையும் சேர்த்துதான் எனத் தெரிகிறது  இந்தோனேசியா வரை இராமாயண  கதையின் அடையாளங்கள்   கிடைப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் ஆனால் தமிழ் நாட்டை ராவணன் ஆண்டதாக குறிப்பு இல்லை மூன்று உலகங்களையும் வென்ற ராவணன் ஏன் [அவன் தமிழ் பேசும் மன்னனாக  பரவலாக கருதப் படும் பட்சத்தில்]தமிழகம் வரவில்லை அகத்தியர் தான் காரணம் எனக் கூறப்படுகிறது ராவணன் தமிழ்நாடு பக்கம் வராமல் காந்தர்வத்தால் வசியம் செய்து அகத்தியர் தடுத்துவிட்டார் எனப் படுகிறது.
                                                                     அகத்தியரைப் போலவே ராவணனும் ஒரு mysterious guy  எனலாம் ராவணன் நம் தமிழ் சினிமாக்களில் வருவதுபோல் நாயகியை  தூக்கிச்சென்று  ரேப் செய்யமுயலும் மூளையற்ற மாமிசமலை வில்லன் அல்ல அவனது பத்து தலைகள் அவனது அளவற்ற அறிவைக் காட்டும் குறியீடாக இருக்கக் கூடும் ' வீர்யம்'  மிக்க  ஆண்மகன் எனவும் தெரிகிறது அவனது அந்தப் புறம் நிரம்பி வழிந்தது விரும்பாத பெண்களையும் அவன் விட்டுவைப்பதில்லை தான் ஆனால் சீதையிடம் அவன் தன் வலுவைக் காண்பிக்கவில்லை  போரில் மட்டுமல்ல வீணை போன்ற நுண்கலைகளிலும் தேர்ச்சி இருந்தது [ஹிட்லருக்கு ஓவியத்தில் இருந்த  புலமை ஒப்பு நோக்கத் தக்கது ]தேவர்களைக் கொடுமை செய்தாலும் அவனது நாட்டு மக்களை நன்றாகவே வைத்திருந்தான்                                                                                              ராவணன் இலங்கையை ஆண்ட சமயத்தில் தமிழ் நாட்டில் இருந்த மன்னர்கள் யார் ராமாயணம் வானரங்களாக குறிப்பிடும் சர்ச்சைக்கு உரிய மக்கள் யார் என்பதற்கெல்லாம் விடை ஒரு வேளை பொதிகை மலையிலும் சதுரகிரியிலும் தலை மறைவாய் சுற்றிக் கொண்டிருக்கும் அகத்தியரிடம் இருக்கலாம் ஏனெனில் இந்த சம்பவங்களுக்கு எல்லாம் அவர்தான் ஒரே ஒரு ஐ விட்னெஸ் போல தெரிகிறது!

Thursday, May 20, 2010

மர்ம யோகி அகத்தியர் 2


பத்து வருடங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்துக்கு வந்ததும் முடி கொட்டிய கரடி போல் இருந்த ஒருவரை நண்பர் அறிமுகப் படுத்தினார் பரம்பரை  சித்த வைத்தியர் என்று சொன்னதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து நான் சிந்தாமணி வைத்தியர் என்றார் சிந்தாமணி வைத்தியமுறை குமரி மாவட்டத்தில் மட்டுமே தற்போது இருக்கிறது அது ராவணன் ஏற்படுத்திய வைத்தியம் நான் சந்தேகத்துடன் சீதையை தூக்கிப் போன ராமாயண ராவணனா என்றதற்கு அவர் மிகுந்த கோபமுற்று சீதையை ராவணன் தூக்கிப் போகவில்லை அது ஆரியர்களின் கட்டுக்கதை என்றார் அப்படியானால் சீதை தானாக இலங்கைக்கு  சுற்றுலா போய்விட்டாளா என்று நான் கேட்டதற்கு சற்றும் அசராமல் ஆமாம் என்றார் சீதையின் பிறப்பில் உள்ள ரகசியம் உங்களுக்கு தெரியுமா சீதை ஜனகனின் வளர்ப்பு மகள் மட்டுமே உண்மையில் சீதை ராவணனின் மகள் அப்படியானால் ராமன் தான் சீதையை தூக்கிப் போயிருக்க வேண்டும் என்றார் எனக்கு லேசாக தலை சுற்றுவது போல் இருந்து சமாளிப்பதற்குள் அகத்தியர் ஒரு ஆரிய உளவாளி என்ற அடுத்த குண்டை வீசினார்                                                                                                                                        அவர் கருத்துப் படி தமிழர்களின் வைத்தியமுறைகளை கடத்திவர அனுப்பப் பட்டவர் தான் அகத்தியர் உண்மையான தமிழ் மருத்துவத்தின் தந்தை ராவணனே அவனது பல நூல்கள் அழிக்கப் பட்டன அல்லது  மறைக்கப் பட்டன ஆயுர்வேதம் என்பது திருடப் பட்ட சித்த [சிந்தாமணி]மருத்துவமே ஆகவே எல்லா சித்த மருத்துவக் கல்லூரிகளிலும் ராவணன் சிலை நிறுவப் பட வேண்டும் !                                                                                                                           வரலாறு என்பது எப்போதுமே வென்றவர் எழுதுவது ராம ராவண யுத்தத்தில் ராவணன் வென்றிருந்தால் வேறுவிதமான பார்வை உள்ள சரித்திரமே நமக்கு கிடைத்திருக்கும் அகத்தியர் பற்றியும் ராவணன் பற்றியும் வைத்தியர் சொன்னது ஒரு எதிர்வரலாறு பொது வெளியில் நாம் கேட்கும் வரலாறுகளுக்கு மாற்றான இந்த வரலாறுகள் உண்மையோ இல்லையோ ஒரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி ஒரு முழுச் சித்திரத்தை அளிக்கின்றன புத்தகச் சந்தையில் இஸ்லாம் தமிழர் சமயம் என்று கூட புத்தகம் பார்த்தேன் டாவின்சி கோட் போன்றவைகளும் எதிர் வரலாறு தான்                
                            ராவணன் எழுதியதாக சிலநூல்களே இப்போது கிடைக்கின்றன ராவணன் நாடி சாஸ்திரம் ராவண சம்ஹிதா என்ற இரண்டு நூல்கள் விநோதமாக இரண்டுமே தமிழில் கிடைக்கவில்லை !ராவண நாடி சாஸ்திரம்  என்ற பேரில் நர்மதா பதிப்பகம் தமிழில் ஒரு நூல் வெளியிட்டுள்ளது மாற்றாக ''ஆர்ய உளவாளி '' அகத்தியரின் எல்லா நூல்களும் தமிழில்தான் கிடைக்கிறது சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்தியரின் ஒரு சம்ஸ்கிருத நூல் கூட கிடைக்கவில்லை !                                                                                                          முதலில் அகத்தியர் என்று நாம் குறிப்படுவது ஒரு ஆளைத்தானா என்பதே சந்தேகம் ராமாயணத்தில் ராவணனை வெல்ல ஆதித்ய ஹிருதயம் ராமனுக்கு  சொல்லிய அகத்தியரும் கும்ப முனியும் சித்த வைத்தியர் அகத்தியரும் ராவணனிடம் இசைப் போட்டியில் வென்றவரும் நாடி ஜோதிடர் அகத்தியரும் ஒரே ஆள்தான்  என்று அடித்து சொல்பவரும் 37 அகத்தியர்கள் உண்டு [சமீபத்திய கணக்கு ]என்று உதைத்து சொல்பவரும் உண்டு இதேபோல் ராவணனும் பல ராவணன்கள் இருக்கலாம் [ராவணன் எத்தனை ராவணனடி!]                       

    அகத்தியருக்கு பல இடங்களில் கோயில்கள் உண்டு ராவணனுக்கும் மத்திய இந்தியாவில் கோயில் இருப்பதாக கேள்வி திருநெல்வேலி நெல்லைஅப்பர் கோயிலில் ராவணன் சிலை உண்டு முன்பு வழிபாடும் இருந்ததாக சொல்கிறார்கள் எல்லாம் ராமனுக்கே வெளிச்சம்

Wednesday, May 19, 2010

ச்சீ இணையம் ....

நான் இணையத்தில் ப்ளாக் எழுதப் போகிறேன் என்றதும் நலம்விரும்பிகள் எல்லாம் திடுக்கிட்டு கடுமையாக எச்சரித்தார்கள் போலீசில் கேஸ் கொடுப்பார்கள் வீடு தேடிவந்து உங்கள் கவிதையை உங்களுக்கே [உங்கள் குடும்பத்துக்கும்] புதிய அர்த்தங்களுடன் படித்துக் காண்பிப்பார்கள் பணியிடத்தில் வந்து கோஷம் இட்டு கலவரப் படுத்துவார்கள் உங்களை மனநோயாளி என்று மேடைகளில் பரிதாபத்துடன் உறுதிப்படுத்தி சரியான டாக்டரிடம் காண்பித்து முறையாக மாத்திரை சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார்கள் '' ங்கொய்யால உன்னோட .....''என்று சங்கத் தமிழில் பின்னூட்டம் இடுவார்கள் என்றெல்லாம் தெளிவு படுத்தினார்கள் பெண்ணியர்கள்,மார்க்சியர்கள் பகுத்தறிவு பகலவன்கள்,சனாதனவாதிகள்,மார்க்கவாதிகள்,நற்செய்தியாளர்கள் ,தூய தமிழ் வாதிகள்  என்று எவரையும் கோபப் படுத்தாமல் எழுதுவது மவுன்ட் ரோட்டில்   சைக்கிள் ஓட்டுவதை விட சிரமமானது என்று பயம் காட்டியதைக் கேட்டதும் எனது 'இலக்கியத் தொடை ' சற்று நடுங்கவே செய்தது  என்ன செய்வது விநாச காலே விபரீத புத்தி ஆனால் அவர்கள் சொல்வது உண்மை என்று இணையத்தில் லேசாக உலவினாலே புரிந்துகொள்ள முடியும் இணையம் ஏன் இப்படி பண்பாடு அற்ற பயவெளியாக மாறிவிட்டது?  இணையம் தரும் கட்டற்ற சுதந்திரத்தை நாம் தவறாக பயன்படுத்துகிறோமா?

சமீபத்தில் தோழி ஒருவரிடம் அவர் மகனின் அறிவு வளர்ச்சிக்காக இணைய தொடர்பு பெறச் சொல்லி அறிவுரை செய்தேன் அவர் பதிலுக்கு என்னுடைய இணைய தொடர்பையும் துண்டித்துவிடும்படி பதில் அறிவுரை செய்தார் என்னுடைய பல்வேறு குணக் கேடுகளுக்கு நான் நடுஇரவு வரை கண் விழித்து இணையம் மேய்வதுதான் காரணம் என்றார் அவர் நான் 'அறிவுத் தேடல்தான்' செய்கிறேன் என்று சொன்னால் நம்ப போவதில்லை   என்று தெரிந்தது [அறிவுத் தேடல் செய்கிற மூஞ்சியப் பாரு ]அவர் சொல்வதிலும் உண்மை இருக்கவே செய்கிறது இணையத்தை உபயோகம் செய்வோர்களில்  பாதிக்கும் மேல் போர்னோ தளங்களைத் தான் தேடுகிறார்கள் [நான் அந்தப் பக்கமெல்லாம் போகவே மாட்டேன் என்று சொல்லவே நான் விரும்புகிறேன் ...ஆனால் இன்று  எனது பிறந்த நாள் இந்த நாளிலும் பொய் சொல்லவேண்டுமா என யோசிக்கிறேன் ] எவ்வளவு பூட்டு போட்டாலும் இவற்றை  இணையத்தில் தவிர்க்கவே முடியாது  மிகச் சாதாரணமாக father and  daughter என்று கூகிள் செய்தால் கூட  விபரீதமான விடைகள்தான் அதிகம் கிடைக்கின்றன வன்முறையும் காமமும் நம் வாழ்வின் ஒரு பகுதியே அவற்றையும் நாம் பேசவே வேண்டும் ஆனால் இணையத்தில் உள்ள சுதந்திரம் காரணமாகவோ புற உலகில் அது இல்லாதது காரணமாகவோதான் இணையத்தில் அவற்றை மட்டு இன்றி வெளிப்படுத்துகிறோமா ?

புற கலாச்சரங்களுக்கு இணையாக இணைய கலாச்சாரம் ஒன்று உருவாகி உள்ளது இதன் தனி மனித சமூக தாக்கங்களைப் பற்றி ஆராய வேண்டும் தனி வாழ்வில் செய்யத்தயங்கும் விசயங்களை ஒரு மனிதன் இணையத்தில் தயக்கம் இன்றி செய்கிறான் மேசைப் புரட்சியாளர்கள் போல இணையத்தில் மட்டும் புரட்சி செய்பவர்கள் நிறைய பேர் தோன்றி உள்ளனர்  இவர்களை நேர் வாழ்வில் காணும்போது மேக் அப் இல்லாத நடிகையைப் பார்ப்பது போல அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது [அவனா நீயி ?]பணியிட உளவியல் போல இணைய உளவியல் என்று புதிதாக ஒரு துறையை உருவாக்கி நிறைய சப்லடேர்ன் எழுத்தாளர்களின் மண்டையை ஆராய்வது சமூகத்தின் பாதுகாப்புக்கு உகந்தது என்று தோன்றுகிறது

Tuesday, May 18, 2010

மர்ம யோகி 1

ஏறக் குறைய 9000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரிய பிராமணர்க்கு மகனாக பிறந்தார் இவர் குஜராத் மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் கல்வி பயின்ற இவர் அங்கிருந்து கிளம்பி குமரி கண்டத்தை ஆண்டு வந்த ராவணனிடம் சென்று தனக்கென ஒரு ராச்சியத்தையே பெற்று ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவினார் அப்போது கடல்கோள் வரவே அங்கிருந்து கிளம்பி தோரணமலை வந்து ஒரு பெரிய ஆய்வுக் கூடத்தை நிறுவினார் பின்னர் கடல் கோள் வராத இடம் என பொதிகை மலையை  தேர்ந்து இன்னமும் அங்கு தன்னை தேடி வருபவர்க்கு போதிக்கிறார் தெரிந்த ஆள்தான் பெயர் அகத்தியர் என்று சொல்வார்கள் இவர் உடன் சுப்ரமணியரும் [அதாங்க நம்ம முருகக்கடவுள் ]சேர்ந்துதான் தமிழ் மொழியை உருவாக்கினார்கள் என்று பிரபஞ்சசாரம் என்ற பழைய ஓலைச் சுவடி சொல்கிறது  உண்மை என்றோ இல்லை என்றோ மறுக்க முடியாது கும்பமுனி குறுமுனி அகத்தியர் பற்றி உலவும் எத்தனையோ கதைகளில் இது ஒன்று தொல்காப்பியத்துக்கு முன்பாக அகத்தியர் இயற்றிய அகத்தியம்  பற்றி குறிப்புகள் மட்டும் கிடைக்கின்றன ஆனால் எந்த ஒரு கோயிலுக்குப் போனாலும் அந்த தல வரலாற்றுடன் அகத்தியர் சம்பந்தமாக ஒரு கதை இருக்கும் அவர் சிறு வேடத்திலாவது வராத புராணமோ இதிகாசமோ இல்லை எல்லா சித்தருக்கும்  தலையாய சித்தர் வைத்திய நூல்கள் மட்டும் அல்ல  ரசவாதம் மாந்திரீகம் ஜோதிடம் என்று எழுதிக் குவித்தவர் [உங்களால் நம்ப முடிந்தால் ] இன்னமும் நாடிஜோதிடம் மூலமாக நம்முடன் உரையாடுபவர்  பின்னால்  ஹிந்து மதத்தில் ஆதிசங்கரர் செய்த வேலைகளை பல காலம் முன்பே செய்தவர் தமிழிலும் சனாதன தர்மத்திலும் தவிர்க்கவே முடியாத ஒரு ஆளுமை அகத்தியர் யார் இவர் இவர் பின்புலம் என்ன என்று ஒரு  சிறிய பிரயாணம்....

Thursday, May 13, 2010

இசைபட வாழ்தல் -1

பாடும்போது அசையாத கல்சிலை போன்ற உடல்  மிகப் பெரிய குங்குமப் பொட்டு பாவமே இல்லாத முகம் ஆனால் இந்திய திரை உலகில் இவர் அளவு உணர்ச்சிமிக்க குரல் எவருக்கும் இருந்ததில்லை இவ்வளவுக்கும் சுத்தமான சுருதி இவர் குரலில் உள்ளதாக சொல்லமுடியாது உச்ச்ஸ்தயிகளில் நடுங்கவேறு செய்யும்  சுசிலாவின் குரலைப் போல் ஆற்றொழுக்கான குரலும் கிடையாது அவ்வப்போது பிசிறு அடிக்கும் காற்று வரும் ஆனால் நம் உயிரோடு உயிராக இழைந்து நம் காதோடு காதாக கொஞ்சும் மயக்கும் கிறக்கும் குரல் நிலா காயுது பாட்டை சுசிலா குரலில் கற்பனை செய்து பார்த்து  உள்ளம் நடுங்குகிறது சுசிலா ஒரு கிராமத்துப் பெண்ணுக்காக பாடினாலும் தனது சாஸ்திரிய  சங்கீத நகாசுகளை விட்டுவிடமாட்டார் ஜானகி அப்படி அல்ல காதலும் தாபமும் பொங்கித் ததும்பும் நம் கனவுத் தமிழ்ப் பெண்ணின் குரல் கீழே உள்ள பாடல்களைக் கேட்டுப்  பாருங்கள் குறிப்பாக 'நினைத்தால் இனிக்கும் 'கல்யாண ராமனில் வந்த அதிகம் பிரபலம் ஆகாத பாடல் கூடவே 'எண்ணத்தில் ஏதோ சில் என்றது' என்ற பாடலும் ...ஆம் ஜானகியின் குரலை நினைக்கையிலேயே  ஏதோ சில் என்கிறது ...

Payanam - A Journey S. Janaki (Vol 1) Songs - Payanam - A Journey S. Janaki (Vol 1) Tamil Movie Songs - Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews

Payanam - A Journey S. Janaki (Vol 1) Songs - Payanam - A Journey S. Janaki (Vol 1) Tamil Movie Songs - Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews

Wednesday, May 12, 2010

கண்ணீரோ காவியமோ

ஆனால் இலக்கியத்தில் கண்ணீர்க் காவியங்களே வெற்றி பெற்றிருக்கின்றன நகைச்சுவை சுவை மிகுந்த எந்த நூலுக்கும் இதுவரை நோபல் புக்கர் போன்றவை கிடைத்தது போல் தெரியவில்லை நாம் கொண்டாடும் அத்தனை இலக்கியப் படைப்புகளும் கண்ணீர் ததும்பியவே அல்லது ஜெயமோகன் சொல்வதுபோல வாழ்வின் வீழ்ச்சியைப் பற்றி பேசுபவை அந்தவகையில் பார்த்தால் விக்டர் ஹுகோ வின் லெஸ் மிசெரபில்ஸ் ஐ தான் உலகின் மிகப் பெரிய கண்ணீர்க் காவியம் அதை கண்ணீர்விடாமல் உங்களால் படிக்கவே முடியாது \ஏழை படும் பாடு என்று தமிழிலும் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது ஞான ஒளி திரைப் படம் அதன் ஒரே  ஒரு கதை இழையை வைத்து எடுத்தார்கள் மதுரையில் படிக்கும் காலத்தில் அறையில் உடன் இருந்த நண்பர் கண்ணீர் வழிய ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் வில்பர் ஸ்மித் எழுதிய shout at the devil என்ற நாவல் ஸ்மித் பெரிய இலக்கிய எழுத்தாளர் ஒன்றும் அல்ல என்றாலும் அது ஒரு நல்ல நாவல் நான் அவரிடம் உலகின் மகத்தான கண்ணீர்க் காவியமான லெஸ் மிசெரபில் ஐ கொடுத்தேன்... மேலை இலக்கியத்தை விட்டு .உள்ளூருக்கு  வந்தால் இன்று வரை நமது சிறந்த கண்ணீர்க் காவியம் [ஆகவே சிறந்த படைப்பும் கூட ]என ராமாயணத்தை தான் சொல்லவேண்டும் ராமனின் கதை முழுக்க முழுக்க ஒரு tearjerker

அங்காடித் தெருவும் அதீதத்தின் ருசியும்

நான் அங்காடித் தெரு பார்க்கவில்லை ஜெமோ வசனம்  என்ற அம்சம் ஈர்த்தாலும் படம் பெரிய tear jerker [கண்ணீர்க் காவியம்] என்றார்கள் கண்ணீர்க் காவியங்களின் காலம் முடிந்து விட்டதாக நினைத்திருந்தேன் சிவாஜி படங்கள் பலபடங்கள் கண்ணீர்க் காவியங்களே [பாபு என்று ஒரு படம் இருக்கிறது பாருங்கள் இல்லை இல்லை பார்க்காதீர்கள் ]கமலும் நிறைய கண்ணீர்க் காவியங்களை கொடுத்திருக்கிறார் மகாநதி போன்ற அர்த்தம் உள்ள கண்ணீரும் உண்டு உயர்ந்த உள்ளம் போன்ற  அழுவாச்சிப் படங்களும் உண்டு வாழ்வின் இருண்ட பக்கங்களைப் பேசும் கலைப் படைப்புகள் தேவையே ஆனால் அதுவே அதீதம் ஆகி விடக் கூடக் கூடாது எனத் தோன்றுகிறது அதீதத்தின் ருசி அசூயை

Tuesday, May 11, 2010

இடும்பைக் கூர் என் வயிறே

  • கொஞ்ச காலமாக சாப்பாட்டுக்கு லேசாக தாமதம் ஆனால் கூட கை காலெல்லாம் நடுங்கி கண்களில் பூச்சி பறந்து விசை இழந்த பொம்மை போல் ஆகி மருத்துவரிடம் போனதில் அல்சர்  குறைந்த சர்க்கரை வியாதி என்றார்கள் ஆனால் இந்த மனிதர் பிரஹலாத் ஜானி 70 வருடங்களாக சாப்பிடாமல் நீர் அருந்தாமல் இருக்கிறார் மலமூத்திரம் போவதில்லை ஆனாலும் பார்ட்டி நன்றாகத்தான் இருக்கிறார் மூளை கூட பிசகி இருக்கவில்லை என்று இந்திய பாதுகாப்புத் துறை ஆய்வு செய்து சொல்கிறது அவரைக் கேட்டால் சிறுவயதில் 'அம்பாள்' கனவில் தோன்றி நாக்கில் எழுதிய பிறகு பசி தாகம் எல்லாம் போயே போச்சு என்கிறார்

Friday, May 7, 2010

ஒரு திடுக்கிடும் செய்தி

நான் என் கவிதைகள் கதைகள் பக்கத்து வீட்டு மாமிகளுக்கான காதல் கடிதங்கள் இவற்றை வெளியிடுவதற்கென்றே www.ezhuththuppizhai.blogspot.com என்ற தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன்

குமரி தமிழ்நாட்டுடன் இணைந்தது 2

அருமனையில் இன்று சென்னையில் கிடைக்கும் அதே [அ]ருசியுடன் ஸ்பெஷல் தோசை சாப்பிட்டேன் ஏனோ சோகமாக இருந்தது புழுதி பறக்க டூவீலரில் வருகையில் முன்னால் லாரிகளில் மாடு மணல் மரம் இந்த மூன்றும் மாற்றி மாற்றிப் போய்க் கொண்டே இருந்தன ஒரு வகையில் இன்றைய குமரியின் மாற்றத்திற்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதுபோல் தோன்றியது குழித்துறை தியேட்டரில் விஜய் ரசிகர்களின் கட் அவுட் நெரிசல் வியர்வை ....ஆம் குமரி தமிழ்நாட்டுடன் இணைந்தே விட்டது

குமரி தமிழ்நாட்டுடன் இணைந்தது!

பத்து வருடங்களுக்கு முன்பு மாற்றலாகி குமரி மாவட்டத்துக்கு வந்தபோது உண்மையிலேயே காட்டுக்குள் வந்தாற்போல் இருந்தது காலை எட்டு மணி வரைக்கு வராத சூரியனும் விலகாத குளிரும் நின்ற சீர் நெடுமால் போல் நின்று நீரால் ஆன ஒரு பெருஞ்சுவர் போல் பெய்யும் மழையும் ரோட்டில் சர்வ சாதாரணமாக உலவும் விரித்த கூந்தல் அழகிகளும் ஒரு பெருங்கனவுக்குள் நுழைந்த பிரமையை ஏற்படுத்தின சில இம்சைகளும் இல்லாமல் இல்லை விடிகாலையில் வட்டத் தோசைக்கு மாட்டிறைச்சி தொட்டு சாப்பிடுவதை ஜீரணிக்கவே முடியவே இல்லை இரவு பத்து மணிக்கு பெருச்சாளி போல் வளையை விட்டு வெளிப்போந்து ரோட்டோர கடையில் இட்லி சாப்பிட்டுவிட்டு செகண்ட் ஷோ பார்த்துவிட்டு  டீக்கடையில் பால் அருந்திப் பழக்கப் பட்ட எனக்கு எட்டரைக்கே ஆள் அரவம் அற்றுப்  போகும் மார்த்தாண்டம் சற்று கலவரமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது இரவு ஒன்பது மணிக்கு பனிப்புகை உலவும் மார்த்தாண்டம் சாலைகளில் ஒரு சிகரெட்டுக்கு ஏங்கி நடக்கையில் இரவு ரோந்து போலிசால் சந்தேகத்துடன் விசாரிக்கப் பட்ட காமடியும் நடந்தது நெல்லை நாகர்கோயில் சாலையில் பயணிக்கையில் இரண்டு மாவட்ட எல்லைகளை கண்திறக்காமலே கண்டுபிடித்து விடலாம் ஆரல்வாய்மொழி தாண்டி குமரி மாவட்ட எல்லைக்குள் நுழைந்ததுமே ஒரு குளிர்ந்த காற்று வீசும் தமிழ்நாட்டுடன் அறுபதிலேயே இணைந்துவிட்டாலும் குமரிக்கு என தனி கலாச்சாரம் அரசியல் உணவு ரசனை காலநிலை இருந்து வந்தது நெல்லை எங்கள்  எல்லை குமரி எங்கள் தொல்லை என்று கலைஞர் கடுப்பானதிற்கு காரணம் இல்லாமல் இல்லை ஆனால் இன்று?நாகர்கோயிலில் இரண்டு வாரமாய் தண்ணீர் வரவில்லை என்று ஒரு செய்தி கோடைக் கால விடுமுறைக்கு குமரி வருவதாக சொன்ன நண்பரிடம் நீர் இல்லாத பேச்சிப் பாறையை எப்படி காட்டுவது என யோசிக்கிறேன் திற்பரப்பு அருவியில் ஒரே கூட்டம் டிராபிக் ஜாம் என்கிறார்கள்  உள்ளூர் மக்களும் நிறைய உண்டு முன்பு 'பாண்டி' மக்களைப் போல உள்ளூர் வாசிகள் தண்ணீரைக் கண்டு இப்படி பரவசப் பட மாட்டார்கள் இன்று மார்த்தாண்டம்  சாலைகளில் விடிய விடிய வாகனங்களும் புழுதியும் பறக்கின்றன யாரும் எட்டரைக்கு கடையை மூடிவிடுவது இல்லை

Wednesday, May 5, 2010

திருநெல்வேலியும் வெட்டவெளியும்

சமீபத்தில் திருநெல்வேலி போனேன் வழக்கம்போல் வண்ணாரப் பேட்டை சாலைகளில் சென்றபோது ஏதோ ஒன்று வித்தியாசமாக உறைத்தது சற்று சுள் என்றே உறைத்தது நூற்றாண்டுகளாக அங்கு நின்று அந்த சாலைக்கே அழகையும் குளிர்ச்சியும் தந்துகொண்டிருந்த மருதமரங்களை வெட்டிவிட்டார்கள் !இதே போல் தச்சநல்லூர் பக்கம் பசேல் என்று கிடந்த வயல்களையும் 'காடு திருத்தி' மனைகள் ஆக்கி விட்டார்கள் என கேள்விப் பட்டேன் என்னையும் இரண்டு மனைகள் வாங்கிப் போடச் சொன்னார்கள் நிலத்தடி தண்ணீர் நன்றாக கிடைப்பதாக  சொன்னார்கள் பெட்ரோல் கிடைக்கிறதா என்றதற்கு ஏன் முறைக்கிறார்கள் என புரியவில்லை

சித்தர் என்றொரு இனமுண்டு?

சமீபத்தில் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் சித்தர் பரம்பரை என்று தனியாக எதுவும் இல்லை அது ஒரு வாய்மொழி வரலாறே என்றும் சைவத்தின் ஒரு கூறே அவர்கள் என்றும் எழுதியிருந்தார் அவர்  சொன்னது எனக்குள் சில கேள்விகளை ஏற்படுத்தியது அவரை யாரும் வலிமையாக மறுத்து எழுதவில்லை அவரது கூற்றுப் படி சித்தர்களின் காலமும் பிந்தியதே அதிகபட்சம் பதினைந்தாம் நூற்றாண்டு அது திருமூலராக இருந்தாலும் சரிதான் மூவாயிரம் வருடம்  மூலன் உடலில் இருந்து வருடத்துக்கு ஒன்றாய் ஒரு பாட்டு எழுதினேன்  என்பதையெல்லாம் கவிச்சுதந்திரம் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும் அவர்களது மொழியும் பிற்கால தமிழில் தான் இருக்கிறது ஆகவே சித்தர்கள் பற்றி புழங்குகிற கதைகள் எல்லாம் மிகைப்படுத்தப் பட்ட நம் உள்மன  விழைவுகளே என்பது அவர் நிலை இந்தக் கருத்துகளில் ஓரளவு உண்மை இருக்கிறது  சதுரகிரியை விட டிவி தொடர்களில்தான் சித்தர்கள் அதிகம் நடமாடுகிறார்கள் என்று தெரிகிறது இந்திரா சௌந்தர் ராஜன் வகை எழுத்தாளர்களை தவிர வேறு சித்தர்களைப் பற்றி சற்று நிதானமாய் ஆராய்ந்து இருக்கிறார்களா என்று ஏமாற்றமே மிஞ்சியது கிடைத்தவை எல்லாம் பெரும்பாலும் மயிர்க் கூச்செறிய வைக்கும் அதிமானுடக் கதைகள் கபில் ச்வெலேபில் என்பவர் நல்ல புத்தகம் எழுதியிருக்கிறார் என்றார்கள் கிடைக்கவில்லை மீ ப சோமு மூன்று பாகங்களாக எழுதி அண்ணாமலைப் பல்கலை வெளியிட்ட இந்த புத்தகம் சற்று  'உணர்ச்சி வசப் படாமல்' சித்தர்களைப் பற்றி ஆராய்கிறது  மீ ப சோமு  சில சரித்திர நாவல்களை கல்கியில் எழுதி இருக்கிறார் படித்த ஞாபகம் சில  மூத்தக் குடிமக்களுக்கு இருக்கலாம் ஆனால் இந்த புத்தகம் ஒரு 'சரித்திர நாவல் ' அல்ல!

Sunday, May 2, 2010

கேரளத்தில் சங்க இலக்கிய முசிறியை தேடி அகழ்வாய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன உலகத் தமிழ் மாநாடு நடக்கின்ற இந்த சமயத்திலாவது நாம் ஆதிச்ச நல்லூருக்கு போதிய கவனம் தராவிட்டால் நாம் பழம்பெருமை பேசுவதில் அர்த்தமே இருக்காது ஏற்கனவே ஆயிரக்கணக்கான சுவடிகள் பாதிரிகளால் கடத்தப் பட்டு ஐரோப்பாவின் ம்யுசியங்களில் தூங்குகின்றன நம் கையில் இருக்கும் நூல்கள் இவற்றின் மிகச்சிறுபகுதியே உண்மையில் நம்மிடம் இருப்பது யானையின் வால் பகுதி மட்டுமே யானை ஜெர்மனியிலும் லண்டனிலும் நிற்கிறது அதை இங்கு கொண்டுவர இந்த சமயத்திலாவது முயற்சி செய்யவேண்டும் முன்னூறு அடி வள்ளுவர் சிலையை விட இந்த செய்கைதான் தமிழை அழியாமல் காக்கும்

LinkWithin

Related Posts with Thumbnails