Thursday, October 21, 2010

மர்ம யோகி அகத்தியர் 11

பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து பேருந்தில் நெல்லை திரும்பிக் கொண்டிருந்தேன்.அருகில் ஒரு வெள்ளையர்.காவி வேஷ்டி ,கழுத்தில் உருத்திராட்சம் மற்றும் ஏராள நவமணி மாலைகளுடன் கொஞ்சம் மார்க்கமாகவே இருந்தார்.கையில் ரமணர் பற்றிய புத்தகம் ஒன்று.நானோ ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து கொண்டு ஸ்டீபன் ஹாகிங் புத்தகத்துடன் இருந்தேன்.எனக்கு அந்த சூழலின் முரண் புரிய அவரைக் கவனிக்க ஆரம்பித்தேன்.மதுரை வரை விடாது பேசிக் கொண்டே வந்தார் அவர்.பேசியதில் அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நில அளவியலாளர் என்று அறிந்து கொண்டேன்.விடுமுறைக்காக இந்தியா வந்திருக்கிறார்.இது ஏழாவது முறை.இந்தியா முன்பை விட இப்போது அதிக சத்தம் போடுகிறது என்று சிரித்தார்.சாலையோர மோட்டல்களில் நட்ட நடு இரவிலும் அலறும் பாடல்களைத்தான் அவ்விதம் குறிப்பிட்டார்.ஆனாலும் அவர் பஸ் எங்கெல்லாம் நிற்கிறதோ அங்கெல்லாம் இறங்கிப் போய்விடுவார்.ஒருவேளை சர்க்கரை நோயாளியோ என்று நினைத்தேன்.இல்லை.அவர் போனது வாழைப்பழங்களுக்காக.ஒவ்வொரு நிறுத்தத்திலும் நிறைய வாழைப் பழங்களோடு வருவார்.எனக்கும் சேர்த்து  வாங்கிவந்து வற்புறுத்துவார்.எனக்கு அவரது வாழைப் பழக் காதல் ஆச்சர்யமளிக்க உங்கள் ஊரில் அவை கிடைப்பதில்லையா என்று கேட்டேன்.'இத்தனை வகை.இத்தனை ருசி கிடைப்பதில்லை''என்றார்.அங்கு கிடைப்பதெல்லாம் தென் அமெரிக்காவில் இருந்து வரும் பெரிய ஆனால் ருசி அதிகம் அற்ற பழங்கள்.அது இருக்கட்டும்.வாழைப் பழத்துக்கும் அகத்தியருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா..வருகிறேன்.

இந்தியாவில் மட்டும் எப்படி இத்தனை வகை வாழைப் பழங்கள் கிடைக்கின்றன?காரணம் இந்தியாதான் வாழைப்பழத்தின் தாயகமாய் இருக்க கூடும்.ஒரு தாவரம் எங்கு முதலில் தோன்றியதோ அங்குதான் அதிக வகைகளைக் காணமுடியும்.நான் பிறந்த இடத்தில்தான் என் சொந்தக் காரர்கள் அதிகம் இருப்பார்கள் இல்லையா.அது போல்தான்.உதாரணமாக இன்று நாம் அதிகமாக பயன் படுத்தும் உருளைக் கிழங்கு உள்ளூர்  அல்ல.தென் அமெரிக்காவைச் சார்ந்தது.அதில் மட்டுமே குறைந்தது ஐந்தாயிரம் வகைகள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.நம்மிடம் அத்தனை வகைகளும் கிடையாது.அத்தனை வகைகளும் இங்கு வளரவும் செய்யாது.[இதற்கு மேல் உருளைக் கிழங்கு பற்றிய விபரங்களுக்கு எழுத்தாளர் ஞானியை அணுகவும்.அவர் உருளைக் கிழங்கு மகாத்மியம் என்ற காவியம் இயற்றி வருவதாய்க் கேள்வி]

வாழைப் பழம் போன்று பல்வேறு தாவரங்கள் குறிப்பாக மூலிகைகளின் தாயகம் பொதிகையே.உலகின் முக்கியமான பல்லுயிர்த் தொகுதி மையங்களில் பொதிகை மிக முக்கியமானது.இமய மலையில் கிடைக்காத மூலிகைகள் அவற்றின் பல்வேறு வகைகள் பொதிகையில் மட்டுமே கிடைக்கின்றன.இதுவே சித்தர்களையும் அகத்தியரையும் பொதிகை நோக்கி வரச் செய்த காரணம்.ஞானம்  வேண்டுமெனில் மலைக்குப் போ என்று ஒரு சொல் உண்டு.அதற்குப் பல காரணங்கள்  உண்டு.ஒன்று மக்கள் கூட்டத்திடமிருந்து விலகுவது.இரண்டாவது சுத்தமான நீர்.காற்று போன்றவை .மூன்றாவது மூலிகைகள்.

ஞானம் அடைவதற்கு மூலிகைகள் அவசியமா என்று கேட்கிறீர்களா..சித்தர்கள் நோக்கில் அவசியம்..மற்ற ஞானியாரைப் போல சித்தர்கள் மரணத்தை இறைவனது மீற முடியாத கட்டளையாகப் பார்க்கவில்லை.ஒவ்வொரு தடவையும்  பிறந்து இறந்து அலைவதையோ அல்லது இறைவனது இறுதித் தீர்ப்பு நாளுக்காய் வெய்ட்டிங் லிஸ்ட்டில் இருப்பதையோ அவர்கள் விரும்பவில்லை.முக்தி அல்லது முழு ஞானம் அடையும் வரை மரணம் அண்டாமல் இருக்க வேண்டும் என்றே யோசித்தார்கள்.மரணமில்லாப் பெரு வாழ்வு என்பதை சாத்தியமற்ற ஒன்றாக அவர்கள் கருதவில்லை.அதற்கு பக்தி,யோகம் ,மூச்சுப்பயிற்சி இவை மட்டும் போதாது என்று அவர்கள் உணர்ந்தார்கள்.இயல்பிலேயே நம் உடலில் நிகழும் வளர் சிதை மாற்றத்தின் திசையை அவர்கள் சில மூலிகைகளால் மாற்றி அமைக்க முடியும் என்றுஅவர்கள் கண்டுகொண்டார்கள்.அந்த மூலிகைகளைத் தேடித்தான் அவர்கள் பொதிகைக்கு வந்தார்கள்.

இவ்வாறு மூலிகைகள்  மூலம் உடலை நிலைப் படுத்தி மரணமில்லாமல் இருக்கும் நிலைக்கு காயசித்தி என்று பெயர்.காயசித்திக்குப் பயன்படும் மூலிகைகள் கற்ப மூலிகைகள் என்று பெயர்.கற்பம் எனில் கோடி.கோடி ஆண்டுகள் வாழவைக்கும் மூலிகைகள்!மூலிகைகளையும் ரசத்தையும் வேறு தனிமங்களையும் பயன்படுத்தி இந்த கற்பங்கள் தயாரிக்கும் முறைகள் பற்றிய குறிப்புகள் சித்தர் பாடல்களில் கொட்டிக் கிடக்கின்றன.ஆனால் எல்லாவற்றையும் அப்படியே நம்பி இறங்கிவிடுவது ஆபத்து.முதலில் அவர்கள் தங்கள் பாடல்களில் பெரும்பாலும் பரிபாசை யையே பயன்படுத்தி இருக்கின்றனர்.குரங்குக் கை என்று எழுதி இருப்பதை நம்பி குரங்கின் பின்னால் கத்தியுடன் அலைவதோ சிங்கத்தின் சிறுநீர் என்று சொல்வதை அப்படியே நம்பி சிங்கம் எப்போது உச்சா போகும் என்று அதன் பின்னால் பாத்திரத்துடன் அலைவதோ கூடாது.இவையெல்லாம் மூலிகைகளின் பெயர்கள்.சில சமயங்களில் ஒரே மூலிகையை பல பேர்களில் சொல்லுவதும் உண்டு.அவற்றையெல்லாம் இனம் கண்டறிந்து தேடிக் கண்டு பிடிக்கவேண்டும்.இன்றைக்கு பொதிகை மலை இருக்கிற இருப்பில் மூலிகைகள் கிடைப்பதை விட மலை உச்சிகளில் பல்வேறு விதமான பிராந்திக் கோப்பைகள் கிடைப்பதே எளிதாக இருக்கும்.

ஒருவேளை உங்கள் ஊழ்வினைப் பயனால் இந்த மூலிகைகள் எல்லாம் கிடைத்து கற்பம் செய்துவிட்டதால் போதாது.அதை உண்ணுவதற்கு மிகக் கடுமையான பத்தியங்கள் உண்டு.காலையில் கற்பம் சாப்பிட்டுவிட்டு மலையில் பிட்சா சாப்பிடலாம் என்று நினைக்கக் கூடாது.உப்பு,புளி.காரம் .இவை எல்லாம் சேர்ந்த பெண் எதையுமே தொடக் கூடாது.தொட்டால் ஏற்படக் கூடிய விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல!

உண்மையில் அது மறுபிறப்பு போன்றதே.கற்பங்கள் சாப்பிடும் போது பூமிக்குள் ஆழக் குழி தோண்டி கண்காணாது வசிப்பதே நல்லது எனச் சொல்லப் படுகிறது.ஏனெனில் அந்த சமயத்தில் 4444 வகை நோய்கள் தாக்கும் என்று சொல்லப்படுகிறது.அவற்றிடம் இருந்து தப்பிக்கவே இந்த பங்கர் வாசம்.கற்பம் சாப்பிட சாப்பிட உங்கள் தேகம் முழுக்கவே மாறுகிறது.பாம்பு சட்டையை உரிப்பது போல் உங்கள் பற்கள் நகங்கள் கூட உதிர்ந்து மீண்டும் முளைக்கின்றன!இறுதியில் கிடைக்கிறது உங்களுக்கு ஒரு மரணமில்லா ஒளிதேகம்.

சதுரகிரி மலையின் இன்னும் கண்டுபிடிக்காத குகைகளின் ஆழத்தில் இது போல் கற்பம் சாப்பிட்ட  அப்ரெண்டிஸ் சித்தர்கள் நிறைய பேர் அறிதுயிலில் இருப்பதாகவும் அந்த குகைகளை பூதங்களும் கருப்பணசாமியும் காவல் காப்பதாகவும் தகவல்.இது போல் அப்ரெண்டிஸ் சித்தர்கள் பயிலும் பள்ளி ஒன்றை சதுரகிரி மலையில் அகத்தியர் நடத்துவதாகவும் கேள்வி!

LinkWithin

Related Posts with Thumbnails