நான் இணையத்தில் ப்ளாக் எழுதப் போகிறேன் என்றதும் நலம்விரும்பிகள் எல்லாம் திடுக்கிட்டு கடுமையாக எச்சரித்தார்கள் போலீசில் கேஸ் கொடுப்பார்கள் வீடு தேடிவந்து உங்கள் கவிதையை உங்களுக்கே [உங்கள் குடும்பத்துக்கும்] புதிய அர்த்தங்களுடன் படித்துக் காண்பிப்பார்கள் பணியிடத்தில் வந்து கோஷம் இட்டு கலவரப் படுத்துவார்கள் உங்களை மனநோயாளி என்று மேடைகளில் பரிதாபத்துடன் உறுதிப்படுத்தி சரியான டாக்டரிடம் காண்பித்து முறையாக மாத்திரை சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார்கள் '' ங்கொய்யால உன்னோட .....''என்று சங்கத் தமிழில் பின்னூட்டம் இடுவார்கள் என்றெல்லாம் தெளிவு படுத்தினார்கள் பெண்ணியர்கள்,மார்க்சியர்கள் பகுத்தறிவு பகலவன்கள்,சனாதனவாதிகள்,மார்க்கவாதிகள்,நற்செய்தியாளர்கள் ,தூய தமிழ் வாதிகள் என்று எவரையும் கோபப் படுத்தாமல் எழுதுவது மவுன்ட் ரோட்டில் சைக்கிள் ஓட்டுவதை விட சிரமமானது என்று பயம் காட்டியதைக் கேட்டதும் எனது 'இலக்கியத் தொடை ' சற்று நடுங்கவே செய்தது என்ன செய்வது விநாச காலே விபரீத புத்தி ஆனால் அவர்கள் சொல்வது உண்மை என்று இணையத்தில் லேசாக உலவினாலே புரிந்துகொள்ள முடியும் இணையம் ஏன் இப்படி பண்பாடு அற்ற பயவெளியாக மாறிவிட்டது? இணையம் தரும் கட்டற்ற சுதந்திரத்தை நாம் தவறாக பயன்படுத்துகிறோமா?
சமீபத்தில் தோழி ஒருவரிடம் அவர் மகனின் அறிவு வளர்ச்சிக்காக இணைய தொடர்பு பெறச் சொல்லி அறிவுரை செய்தேன் அவர் பதிலுக்கு என்னுடைய இணைய தொடர்பையும் துண்டித்துவிடும்படி பதில் அறிவுரை செய்தார் என்னுடைய பல்வேறு குணக் கேடுகளுக்கு நான் நடுஇரவு வரை கண் விழித்து இணையம் மேய்வதுதான் காரணம் என்றார் அவர் நான் 'அறிவுத் தேடல்தான்' செய்கிறேன் என்று சொன்னால் நம்ப போவதில்லை என்று தெரிந்தது [அறிவுத் தேடல் செய்கிற மூஞ்சியப் பாரு ]அவர் சொல்வதிலும் உண்மை இருக்கவே செய்கிறது இணையத்தை உபயோகம் செய்வோர்களில் பாதிக்கும் மேல் போர்னோ தளங்களைத் தான் தேடுகிறார்கள் [நான் அந்தப் பக்கமெல்லாம் போகவே மாட்டேன் என்று சொல்லவே நான் விரும்புகிறேன் ...ஆனால் இன்று எனது பிறந்த நாள் இந்த நாளிலும் பொய் சொல்லவேண்டுமா என யோசிக்கிறேன் ] எவ்வளவு பூட்டு போட்டாலும் இவற்றை இணையத்தில் தவிர்க்கவே முடியாது மிகச் சாதாரணமாக father and daughter என்று கூகிள் செய்தால் கூட விபரீதமான விடைகள்தான் அதிகம் கிடைக்கின்றன வன்முறையும் காமமும் நம் வாழ்வின் ஒரு பகுதியே அவற்றையும் நாம் பேசவே வேண்டும் ஆனால் இணையத்தில் உள்ள சுதந்திரம் காரணமாகவோ புற உலகில் அது இல்லாதது காரணமாகவோதான் இணையத்தில் அவற்றை மட்டு இன்றி வெளிப்படுத்துகிறோமா ?
புற கலாச்சரங்களுக்கு இணையாக இணைய கலாச்சாரம் ஒன்று உருவாகி உள்ளது இதன் தனி மனித சமூக தாக்கங்களைப் பற்றி ஆராய வேண்டும் தனி வாழ்வில் செய்யத்தயங்கும் விசயங்களை ஒரு மனிதன் இணையத்தில் தயக்கம் இன்றி செய்கிறான் மேசைப் புரட்சியாளர்கள் போல இணையத்தில் மட்டும் புரட்சி செய்பவர்கள் நிறைய பேர் தோன்றி உள்ளனர் இவர்களை நேர் வாழ்வில் காணும்போது மேக் அப் இல்லாத நடிகையைப் பார்ப்பது போல அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது [அவனா நீயி ?]பணியிட உளவியல் போல இணைய உளவியல் என்று புதிதாக ஒரு துறையை உருவாக்கி நிறைய சப்லடேர்ன் எழுத்தாளர்களின் மண்டையை ஆராய்வது சமூகத்தின் பாதுகாப்புக்கு உகந்தது என்று தோன்றுகிறது
1 comment:
உண்மை தான். 3 வயது குழந்தைக்கு You tube ல் ஏதாவது rhymes போட்டுக் காட்டாலாம் என்றால் Home page லேயே எதுவும் தேடாமலேயே டாண்ணு வந்து நிக்குது. குழந்தை சொல்லுது puppy shame
Post a Comment