Thursday, June 10, 2010

மர்ம யோகி அகத்தியர் 6

இந்த போகர் இன்னும் ஒரு சுவராஸ்யமான சித்தர்.அகத்தியருக்கு அடுத்தபடி தமிழ் நாட்டில் மிக அறியப் பட்ட சித்தர் போகர் தான்  எனலாம்.ஆனால் அகத்தியர் போல புராணங்களில் இதிகாசங்களில் எல்லாம் காணப் படவில்லை.இவரது வரலாற்றிலும் நிறைய முரண்பாடுகள் உண்டு.அவர் சீனர் என்பது ஒரு கூற்று.இல்லை  இந்தியாவில் விஸ்வ கர்மா[கொல்லர் மற்றும் ஆசாரி] குலத்தில் பிறந்து சீனா சென்று திருமூலரைப் போல் போங் யான்க் என்பவர் உடலில் புகுந்து 12000 ஆண்டுகள் [!] உயிர் வாழ்ந்து நிறைய நூல்கள் சீனமொழியில் பல நூல்கள் எழுதி மீண்டும் தமிழ்நாடு வந்து பழனி தண்டாயுதபாணி சிலையை வடிவமைத்தார் எனவும்  சொல்வர்.[சித்தர்கள் வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து போராடிய சமூக சீர்திருத்த வாதிகள் என்ற படிமம் ஒரு பக்கம் இருந்தாலும் ஒவ்வொரு சித்தரின் வரலாற்றிலும் மறக்காமல் அவர்களது ஜாதி குறிப்பிடப் படுகிறது.ஏறக்குறைய எல்லா சாதியிலும் இருந்து சித்தர்கள் தோன்றி உள்ளனர்.]

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்வது போன்ற நம்பச் சிரமப் படுத்தும் விசயங்கள் சித்தர்களிடம் நிறையவே உண்டு.ஆனால் விவிலியத்திலும் இது போல் நூற்றுக் கணக்கான ஆண்டுகள் வாழும் மனிதர் பற்றி தகவல் உண்டு.ஆதாம் 930 வருடங்கள் வாழ்ந்ததாக சொல்லப் படுகிறது.அவனது முதல் குழந்தை பிறக்கையில் அவன் வயது 130 !படிப் படியாக மனிதரின் வாழ்நாள் குறைந்தது என விவிலியம் கூறுகிறது.காக புசுண்டர் யுகம் யுகமாக இருப்பதாக போகர் தனது போகர் 7000 நூலில்  கூறுகிறார்.இது போல் பல நம்ப கடினமான  செய்திகள் இந்நூலில் உண்டு.உதாரணத்துக்கு சீனாவில் ஒரு பிரதேச பெண்களுக்கு மாத விலக்கே வருவதில்லை என்கிறார்!இன்னொரு இடத்தில் தான் தயாரித்த ரசமணி கடலைக் குடித்தது என்கிறார்!தான் தயாரித்த ககனக் குளிகை எனப் படும் ரசமணி உதவியுடன்தான் அவர் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அவர் ஆகாயப் பயணம் செய்கிறார்!

இந்த ககனக் குளிகை போலவே கமனக் குளிகை என்றும் ஒன்று உண்டு.கமனம் என்றால் உடல் உறவு.அந்த சமயத்தில் இதை இடுப்பில் கட்டிக் கொண்டால் விந்து வெளியேறவே செய்யாது என்று கூறப் படுகிறது.[இதை செய்து தருகிறேன் என்று நிறைய பேர் கோடீஸ்வரன் ஆகிவிட்டார்கள்] உண்மையில் சித்தர்கள் பாஷையில் பாத ரசம் சிவனின் விந்து என்றே அழைக்கப் படுகிறது.சக்தியின் நாதம் [மதன நீர்]கந்தகமாக உருவகிக்கப் படுகிறது.இரண்டும் இணைந்தால் தான் உயிரும் பிரபஞ்சமும் உருவாக முடியும்.ரசமும் கந்தகமும்  எதிர் எதிர் நிலைகள்.பாதரசம் குளிர்ச்சியானது.ஆண் தன்மை கொண்டது.கந்தகம் பெண்தன்மை கொண்டது.சூடானது. பெண்கள் உடலில் கந்தகச் சத்து அதிகம்.அதனால் தான் பெண்களின் உடல் ஆண்களின் உடலை விட சூடாக உள்ளது.


ரசவாதம் என்பது இங்கு மட்டும் அல்ல உலகம் முழுவதும் இருந்திருக்கிறது.ஒரு வகையில் நவீன  வேதியியலின் முன்னோடி என சொல்லலாம்.பிரபஞ்சம் முழுவதும் அணுக்களால் ஆனது என்ற கருத்து தோன்றிய உடன் வெகு சீக்கிரமே இந்த அணுக்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப செயற்கையாக மாற்றும் இச்சையும் மனிதனுக்கு தோன்றிவிட்டது.சித்தர்களுக்கும் மற்ற ரிஷிகள் தீர்க்கதரிசிகள் போன்றோருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடே இதுதான்.சித்தர்கள் இந்த பிரபஞ்சத்தை இறை படைத்தது என்று  வணங்கி விட்டு சும்மா இருந்து விட வில்லை.நவீன  அறிவியலாளர்கள் போல் அதை மாற்றி அமைக்க முயற்சி செய்தார்கள்.அவர்கள் மரணத்தைக் கூட இயல்பானது என்று ஒப்புக் கொள்ளவில்லை. மத ஞானிகளைப் போல் அவர்கள் உடலை வெறுத்து ஒதுக்க வில்லை.பெரு மதங்கள் உடலை இழிவானது என்றும்  ஞானம் அடைவதற்கு தடை என்றும் சொன்ன வேளையில்  உடலின் மூலமாகவே ஞானம் பெற முடியும் என்ற மாற்று சிந்தனையை வைத்தவர்கள் சித்தர்கள்.'உடம்பை முன்னம் இழுக்கு என்றிருந்தேன் .'என்ற திரு மூலர் பாடல் பிரபலம்.அதில் அவர் 'உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே 'என்றே சொல்கிறார்.இதன் காரணமாகவே அவர்கள் மருத்துவத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.
ரசவாதத்தை சங்க இலக்கியம் போல் அகம் புறம் என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.சாதாரண உலோகங்களை தங்கமாக மாற்ற முயற்சிப்பதை புற ரசவாதம் என கூறலாம்.பொருளாசை அதிகம் இல்லாத சித்தர்கள் இந்த விசயத்தில் அதிக ஆர்வம் காட்டியதற்கு காரணம் புதிராக இருக்கிறது.ஆனால் அவர்கள் எழுதிய ரசவாத நூல்களைப் படித்துவிட்டு தங்கம் செய்கிறேன் என்று சொத்தை அழித்தவர்கள் அதிகம் உண்டு.நான் மதுரையில் இருந்தபோது தங்கியிருந்த விடுதியின்   காவலாளி பற்றி இதே போல்  ஒரு கதை சொன்னார்கள்.அந்த விடுதியே முன்பு அவருடையது தானாம்.தங்கம் செய்கிறேன் பேர்வழி என்று எல்லா சொத்தையும் இழந்து இறுதியில் குடும்பத்தாலும் துரத்தப் பட்டு கடைசியில் தனது விடுதியிலேயே காவலராக காலம் கழிப்பதாக சொன்னார்கள்.அவர் எப்போதும் அனைவரும் தூங்கிய பிறகு சீரோ வாட்ஸ் பல்பின் மங்கிய ஒளியில் ஒரு பழுப்பு புத்தகத்தை கண்களை இடுக்கி படித்துக் கொண்டே இருப்பார்.ஒரு நாள் பகலில் அவர் இல்லாத சமயம் அந்த புத்தகத்தை பிரித்துப் பார்த்தேன். வேறென்ன..''பதினெண் சித்தர்களின் ரசவாத ஞானம்!''

 

1 comment:

ஜானகிராமன் said...

நண்பரே, உங்களுடைய வலைப்பூவை இன்று தான் பார்க்கக் கிடைத்தது. வெகுஜனத்துக்கு அதிகம் அறியப்படாத செய்திகள், கட்டுரைகள் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். தமிழ்மணம், தமிலிஷ் போன்ற வலைப்பதிவு திரட்டியில் உங்கள் கட்டுரைகளை இணைத்தால் நிறைய வாசகர்கள் படிக்க உதவும்.

LinkWithin

Related Posts with Thumbnails