பரசுராமரைப் போலவே அகத்தியரும் நல்லதொரு போர்வீரர் என்று ராமாயணம் கூறுகிறது!துரோணரின் ஆசிரியர் அகத்தியர் என்றே சொல்லப்படுகிறது.தன்னைச் சந்திக்க வந்த ராமனிடம் தனக்கு விஷ்ணு வழங்கிய ஒரு வில்லை அகத்தியர் பரிசாக வழங்கினார்.
அகத்தியரைப் பற்றி பிரபலமாக வழங்கப் படும் கதை அவர் ஏன் தெற்கே வந்தார் என்ற கதை.இமய மலையில் சிவன் பார்வதி திருமணம் நடை பெற்ற போது வந்திருந்த விருந்தினர்க் கூட்டத்தின் சுமை தாங்காமல் வட கோடு தாழ்ந்து தென் கோடு உயர்ந்தது.அதைச் சமப் படுத்தவே அகஸ்தியரை சிவன் தெற்கே அனுப்பி வைக்கிறார்.இந்தக் கதையின் பின்னால் ஒரு புவியியல் வரலாறும் ஒளிந்திருக்கிறது .
நமது புவி காலந்தோறும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்திருக்கிறது.சமீபத்தில் ஏற்பட்ட ஆழிப் பேரலையைப் போல பல்வேறு ஊழிகளையும் மாற்றங்களையும் சந்தித்திருக்கிறது.முன்பிருந்த நிலப் பரப்புகள் இன்று கடலுக்கடியில் உள்ளன.கடலுக்க்கடியில் இருந்தவை நிலப் பரப்புகளாக உள்ளன.இந்த மாற்றங்கள் பற்றி விவிலியத்திலும் பல்வேறு நாட்டு புராணங்களிலும் நிறையப் பேசுகிறார்கள்.சில நாகரிகங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன .இவற்றைப் பற்றி பல வாய்மொழிக் கதைகள் உலவுகின்றன.அவற்றில் இரண்டு பெருங்கதைகள் உண்டு.ஒன்று நமது குமரிக் கண்டம்.மற்றதின் பெயர் அட்லாண்டிஸ்.[இது பற்றி ஒரு அமெரிக்க ரிஷியில் எழுதுகிறேன்.மிக சுவராஸ்யமான கதை அது]
குமரிக் கண்டம் ஒரு கட்டுக் கதையே என்பவர் உண்டு.தமிழருக்கு இயல்பிலேயே உள்ள தற்பெருமை உணர்வை மேடம் பிளாவட்ச்கியின் பிரம்மா ஞான சபையின் சில கருதுகோள்கள் விசிறிவிட்டதில் விளைந்த கற்பனை என்பார்கள்.இருக்கலாம்.இங்கு நாம் செய்வது ஆராய்ச்சி அல்ல.அகத்தியருடன் இணைந்து பேசப்படும் சில தொன்மங்களைப் பேசுகிறோம் அவ்வளவே.ஆனால் எந்த தொன்மமும் முழுமையாக கற்பனையில் இருந்து வந்துவிட முடியாது.
குமரிக்கண்டம் குமரி முதல் ஆஸ்திரேலியா வரை பரந்து கிடந்ததாக கருதப் படுகிறது.இன்றைய இலங்கையும் உள்ளடக்கி 49 மாநிலங்கள் இருந்தனவாம் அதில்.வடமதுரை என்பதுதான் இதன் முதல் தலைநகர்.இங்குதான் முதல் சங்கம் இருந்தது.இங்குதான் அகத்தியர் தனது அகத்தியம் எனும் நூலை இயற்றினார்.இந்த சங்கம் என்ற சொல் குறிப்பிடுவது தமிழ்ச் சபையைக் குறிப்பிடலாம்.அல்லது இன்று united states of america 51 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி அமைப்பாக இருப்பது போல ஒரு Federation of 49 states ஆகவும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.அதன் பொது மொழியாக தமிழ் இருந்திருக்கலாம்.
முதல் சங்கம் கடல் ஊழினால் அழிந்தது.அதை ஆண்ட பாண்டியர்கள் வடக்கே நகர்ந்து கபாடபுரம் வந்தார்கள்.கொஞ்சகாலத்தில் சிலப்பதிகாரம் சொல்வது போல மறுபடி கொடுங்கடல் கொள்ள கடலே வேண்டாம் சாமி என்று இன்றைய மதுரையைத் தேடிப் பிடித்தார்கள்.அகத்தியர் இன்னும் நகர்ந்து கடல் கோளோ பூமி அதிர்வோ வராத இடம் என்று தேடி இன்றைய பொதிகை மலை வந்து சேர்ந்தார்.இங்கு தென்காசி அருகே உள்ள தோரணவாயில் மலையில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார் என்கிறார்கள்.என்ன ஆராய்ச்சி?ஒருவேளை புவியியல் ஆராய்ச்சிக் கூடமாக இருக்கலாம்.
ஏன் என்று சொல்கிறேன்.நமது பூமியின் நிலப்பரப்பு ஒரே தட்டாக இல்லை.பல துண்டுகளாக ஒன்றோடு ஒன்று பொருந்தித்தான் இருக்கிறது.அவ்வாறு பொருந்தி இருக்கிற பிளவுக் கோடுகளில்தான் [faultlines]பெரும்பாலும் பூமி அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன.நமது தென்தமிழகத்தில் காணப் படும் ஒரு பிளவுக் கோடு தோரணமலை அடியாகவே செல்கிறது.அது தோரண மலைப் பிளவு என்றே அழைக்கப் படுகிறது.!ஆனாலும் இந்த பகுதியில் இதுவரை பூமி அதிர்ச்சிகள் பெரிய அளவில் ஏற்பட்ட்ட்டதே இல்லை.
சரி.அகத்தியர் தெற்கே வந்த கதைக்கு வருவோம்.இமய மலை ஒரு காலத்தில் கடலுக்குள் இருந்தது .அறிவீர்களா.அதன் சிகரங்களில் திமிங்கலங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன!தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத் தொடர்கள் ,சஹாரா பாலைவனங்கள் இவை எல்லாம் கடலுக்குள் இருந்தவையே.இதே போல் பல நிலப் பரப்புகள் கடலுக்கு உள்ளே வெளியே வந்து போய் இருந்திருக்கின்றன. மிகச் சில பகுதிகள் மட்டுமே எப்போதும் புவியின் மேற்பரப்பிலேயே இருந்திருக்கின்றன.இவையே பூமியின் பழமையான நிலப் பரப்புகள்.இந்தியாவைப் பொறுத்தவரை விந்தியமலைக்குத் தெற்கே உள்ள தக்காண பீடபூமி பகுதிதான் அது.கோடு என்றால் மலை என்று பொருள்.இப்போது வடகோடு[இமயம்] தென்கோடு [விந்திய மலை]'உயர்ந்து இருக்கும் கதையின் பின்னால் உள்ள தத்துவம் புரிகிறதா..இந்த தக்காண பீடபூமியிலும் பொதிகைக்கு சிறப்பாக அகத்தியரும் பிற சித்தர்களும் ஏன் ஈர்க்கப் பட்டார்கள் என்று அடுத்து பார்க்கலாம்.
4 comments:
பாராட்டுக்கள்....தொடருங்கள்...அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...!
very interesting
அகத்தியர் அந்த நாளில் இந்தப் பயணம் மேற்கொண்டிருக்கச் சாத்தியமே இல்லை என்று நினைக்கிறேன். சுமையை நிலைப்படுத்த அனுப்பப் பட்டது நிச்சயமாகப் மதவாதிகளின் புனைவு. நீங்கள் சொல்வது போல் ஆரிய தத்துவங்களைப் பரப்புவதற்காக வந்திருக்கலாம் - சுவையான சிந்தனை.
ராமாயணத்தில் கூட தென்னவரைக் குரங்குகள் என்று அழைத்திருப்பதாக நினைக்கிறேன். வருத்தமாகத் தான் இருக்கிறது.
Post a Comment