Monday, August 16, 2010

மர்மயோகி அகத்தியர் 10

அவலோகிதேஸ்வரர் என்பவர் பௌத்த மதத்தின் முக்கியமான போதிசத்துவர்களில் ஒருவர்.போதிசத்துவர்கள் என்பவர்கள் புத்தரின் பரிநிர்வாண நிலையை அடைந்தவர்கள்.நமது அவதாரங்கள்,கிறித்துவத்தின் தீர்க்கதர்சிகள் ,இஸ்லாமின் நபிகள் போன்று சொல்லலாம்.பௌத்தத்தில் ஒரு முக்கியமான போதிசத்துவர் இவர்.தாய்லாந்து போன்ற இடங்களில் அதிகம் வழிபடப் படுகிறார்.இவரைப் பற்றி அதிகம் வரலாற்றுச் செய்திகள் கிடைக்கவில்லை.ஆனால் இவர் தான் நிர்வாணம் அடைந்துவிட்டாலும் உலக உயிர்கள் அத்தனையும் உய்யும்வரை அவர்களை வழிகாட்டுவதற்காக இந்த உலகிலேயே பொட்டிகால என்ற மலையில் இன்றும் இருக்கிறார் எனச் சொல்லப் படுகிறது.கதை வேறெங்கோ திசை திரும்புகிறதே என்று நினைக்கிறீர்களா.இல்லை.இந்த பொட்டிகால மலை வேறு இல்லை.நமது பொதிகை மலைதான்!இவ்வாறு நான் சொல்லவில்லை.shu hikosaka என்ற ஜப்பானிய அறிஞர் சொல்கிறார்.இனி அடுத்த குண்டு.இந்த அவலோகிடேச்வரர்தான் அகத்தியருக்கு பொதிகை மலையில் வைத்து தமிழ் கற்றுக் கொடுத்தார் என்கிறார் இவர்!

தமிழ்நாட்டில் சமணம் பற்றி நிறைய ஆய்வுகள் செய்யப் பட்டுள்ளன.அந்த அளவு பௌத்தம்  பற்றி தெரியவில்லை. ஆனாலும் ஆங்காங்கே சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.அசோகரின் புத்திரிகள் இலங்கைக்கு பௌத்தத்தைப் பரப்ப தென்தமிழகம் வழியாகத் தான் சென்றிருக்கவேண்டும்.ஆனால் இந்த அவலோகிடேச்வரர் என்று சிவனைத் தான் குறிப்பிடுகிறார்கள் என சந்தேகம் உண்டு.கடைசியில் உள்ள ஈஸ்வர் என்ற விகுதியைக் காண்க.மேலும் அவலோகிடேச்வரின் இன்னொரு பெயர் சண்டி!சண்டிகேஸ்வரரை நினைவில் கொள்க.இது போல் கடவுள்களைப் பரிமாற்றம் செய்து கொல்வது ஒன்றும் புதிதல்ல.ஹிந்து மதத்தில் உள்ள சரஸ்வதி,தாரா,விநாயகர் போன்ற தெய்வங்கள் சமணத்திலும் பௌத்தத்திலும் உண்டு.சிவன் மாரனை[மன்மதன்]எரித்த கதை பௌத்தத்தில் புத்தர் மாரனை வென்ற கதையாகச் சொல்லப் படுகிறது.ஆனால்  இங்கு மாரன் கிறித்துவம் கூறும் சாத்தானைப் போன்றவன்!நிர்வாண நிலை அடையாமல் உயிர்களை தனது மாயையால் தடுப்பவன்.நாம் கூறவந்தது இதுவல்ல.பௌத்தமும் அகத்தியர் என்ற தொன்மத்தை குறிப்பிடத் தக்கதாக கருதி இருக்கிறது என்பதைச் சுட்டவே.

அகத்தியருக்கும் தமிழுக்கும் பொதிகைமலைக்கும் உள்ள பிணைப்பு  பற்றி நிறைய தொன்மங்கள் உலவுகின்றன.ஆதியில் சிவன் வியாசரை சமக்ரிதத்தையும் அகத்தியரை தமிழ் மொழியையும் உருவாக்குமாறு பணித்து அனுப்பி வைத்தார் என்று புராணங்கள் கூறும்.தெற்கே வந்த அகஸ்தியருக்கு தமிழ்க் கடவுளான முருகனே தமிழைக் கற்பித்தான் என்பது இன்னொரு தொன்மம்.ஆகவே தெய்வத்தால் கற்பிக்கப் பட்டது என்ற தர்க்கப் படி தமிழும் தேவ பாஷையே.

அகத்தியருக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு சர்ச்சைக்குரியது.ஒரு ஆரியர் தமிழைத் தோற்றுவித்தார் என்பதை நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம்.ஆனால் இந்த தொன்மத்தை திரும்ப திரும்ப நாம் சந்திக்க நேரலாம்.தமிழில் கிடைத்த  ஆதி நூலை இயற்றிய தொல்காப்பியர் அகத்தியரின் சீடர் எனப் படுகிறது.ஆனால் தொல்காப்பியத்தில் ஒரு வரி கூட அகத்தியரைப் பற்றிக் கிடையாது!ஆனால் அதற்கும் ஒரு தொன்மம் காரணமாகச் சொல்லப்படுகிறது.தொல்காப்பியர் உட்பட்ட தனது சீடர்களுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால்தான் அவர் தனது குருவான அகத்தியரையும் அவர் எழுதிய அகத்தியத்தைப் பற்றியும் குறிப்பிடவில்லை என்று அந்த கதை சொல்கிறது.அகத்தியர் இது போல் சீடர்களுடன் முரணுவதில் பேர் பெற்றவரே.ஆனால் இதை வேறு கோணத்தில் அணுகலாம்.வியாசருக்கு முன்னால் வடமொழியோ அகத்தியருக்கு முன்னால் தமிழோ இல்லை  என்று இதற்கு பொருள் கொள்ளத் தேவை இல்லை. இன்றைய வடமொழியின் இலக்கணம் முழுதும் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாணினியால் எழுதப் பட்டுவிட்டது.இது போன்ற ஒரு இலக்கணத்தை அகத்தியர் செய்திருக்கலாம்.தமிழ் மொழி காலம் தோறும் நிறைய மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது.பெரியார் சமீபத்தில் செய்தது ஒரு சிறிய உதாரணம்.எழுத்து முறைகளில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கிறது என்பது உண்மையே.ஆனால் புணர்ச்சிவிதிகள் விகுதிகள் திணைகள் போன்ற அடிப்படை விதிகளில்  பெரிய மாற்றங்களைச் சந்தித்திருக்கிறதா என்பது கேள்வி.அது தேவையும் இல்லை.இவ்வாறு அடிப்படை விதிகளில் அடிக்கடி மாற்றம் செய்து கொண்டிருந்தால் மொழி அழிந்துவிடும் அபாயம் உண்டு.ஆகவே இது போன்ற இலக்கணங்களை வகுத்துக் கொடுத்தவர்களையே அம் மொழியை உருவாக்கியவர் எனச் சொல்லும் உயர்வு நவிற்சி கதைகள் உருவாகி இருக்கலாம்.அகத்தியர் -தொல்காப்பியர் -தமிழ் மொழியின் தோற்றம் என்ற  தொன்மத்தின் காரணம் இதுவாகவே இருக்கலாம்.

ஆனால்  அகத்தியர் பொதிகைக்கு வந்ததன் காரணம் மொழி மட்டுமல்ல.

3 comments:

அப்பாதுரை said...

interesting to read; eager to follow

ஸ்ரீதர் நாராயணன் said...

அருமை. இதை இப்படியே விடாமல் எல்லா பகுதிகளையும் தொகுத்து ஒரு பிடிஎஃபாக போட்டீங்கன்னா பின்னாடி புத்தகமா போட்டுடலாமே :)

// இது போல் கடவுள்களைப் பரிமாற்றம் செய்து கொல்வது ஒன்றும் புதிதல்ல. // உண்மைதான். :)))

bogan R said...

நம்முடையது டெல்லி மேக் டேப் ரிக்கார்டர் போல..தொழில் நுட்பம் போதாது ))

LinkWithin

Related Posts with Thumbnails