Monday, July 5, 2010

மர்ம யோகி அகத்தியர் 8

அகத்தியர்தான் ஆரிய கலாச்சாரத்தை முதல் முதலாய் திராவிடத்துக்கு கொண்டுவந்தார் என்ற குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருக்கக் கூடும்.நாம் தந்தை வழிச்  சமூகமாக இருப்பதற்கு முன்பு நெடுங்காலம் தாய் வழிச் சமூகமாகவே இருந்தோம்.அன்று நமது தெய்வங்களும் தாய்த் தெய்வங்களாகவே இருந்தன.கடவுள் மனிதனை தன் சாயலில் படைத்தானோ என்னவோ மனிதன் தன்  சாயலில் தான் கடவுளைப் படைத்தான்.ஒரு சமூகம்  வணங்கும் கடவுள்கள் அவர்களது கலாச்சாரத்தின் குறியீடாகவே இருக்கும்.

சிவனையும் விஷ்ணுவையும் வணங்கும் முன் நாம் இந்திரனையும் அக்னியையும்தான் வணங்கினோம்.இவர்கள் வேத கால கடவுள்கள்.ஆனால் அதற்கு முன்னால் நாம் சக்தி வழிபாட்டையே செய்து வந்தோம்.நமது சங்க நூல்களில் பழையோள் என்றே கொற்றவை[காளி]குறிப்பிடப் படுகிறாள்.

இங்கு மட்டுமல்ல,உலகெங்கும் தாய்த் தெய்வங்களே வழிபடப் பட்டன.இசிஸ்,அஸ்தார்த் போன்ற பெண்தெய்வங்களே எகிப்திலும் இஸ்ரேலிலும் மோசஸ் வருவதற்கு முன்பு வழிபடப்பட்டன.

ஆனால் தாய்வழிச் சமூகம் தந்தை வழிச் சமூகமாக மாறியபின்பு இந்த தெய்வங்கள் புறக்கணிக்கப் பட்டன.மேலும் இந்த பெண் தெய்வங்களை சாதாரண பொருட்களைக் கொடுத்து 'திருப்திப்' படுத்த முடியவில்லை.அவர்களுக்குச் செய்யும் சடங்குகளில் நிறைய காமமும் வன்முறையும் இருந்தன.மனிதர்கள் ஒரு சமூகமாக உருவாவதற்கு இந்த இரண்டையும் ஒழுங்கு படுத்த வேண்டிய அவசியம் இருந்தது.

செமிடிக் மதங்கள் உண்மையில் தாய்த் தெய்வங்களை சாத்தான் வழிபாடு என்று பயமுறுத்தி முழுக்கவே ஒழித்துக் கட்டிவிட்டன.அவர்களின்  தேவ லோகத்தில் ஒரு பெண் கடவுள் கூட கிடையாது.ஏன் ஒரு பெண் தீர்க்கதரிசி கூட கிடையாது.

ஆனால் இந்தியாவில் சக்தி வழிபாட்டை அத்தனை எளிதில்  ஒழிக்க முடியவில்லை.வேதங்களில் இந்திரனும் அக்னியும் தவிர ருத்திரனும் குறிப்பிடப் படுகிறான் எனினும் ஒரு பயத்தோடுதான் அவனைப் பற்றி பேசுகிறார்கள்.தேவர்களைப் போல் அவன் முழுக்க 'நாகரிக'மானவன் அல்ல.எப்போதும் சுடுகாட்டில் பூத கணங்களோடு திரிந்து கொண்டிருந்த அவனையும் சதா உயிர்ப் பலி வேண்டி நிற்கும் சக்தியையும் வேத முறைப் படி கல்யாணம் பண்ணி வைத்து 'சாந்தி' பண்ணினார்கள்.இந்த கல்யாணத்துக்கு தேவர்கள் அனைவரும் வந்திருந்ததும் இந்த சமயத்தில் தான் அகத்தியர் தெற்கே அனுப்பப் படுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

அகத்தியர் தெற்கே வந்ததும் அதே பாணியில் தான்தோன்றியாய் திரிந்து கொண்டிருந்த நிறைய உக்கிர தேவிகளைப் பிடித்து  கல்யாணம் பண்ணிவைத்து சாந்தப் படுத்தி வைத்தார்.தந்தை வழிச் சமூகத்தின் சின்னமான லிங்கங்களை எல்லா இடங்களிலும் ஸ்தாபித்தார்.தாந்திரிக வழிபாடு முறைகளான நரபலி போன்ற விசயங்கள் மென்மைப் படுத்தப் பட்டு தேங்காய் உடைப்பது குங்குமம் தருவது போன்ற குறியீட்டுச் சடங்குகளாக மாற்றப் பட்டன.தாந்திரீக சடங்குகளை முற்றிலும் புறக்கணித்து விடாமல் அதே சமயம் வேதத்திலும் முற்றிலும் விலகிவிடாமல் ஆகம முறைகள் உருவாகப் பட்டு  பயன் பாட்டுக்கு கொண்டு வரப் பட்டன.

இதே போல் ஒரு வேலையைத்தான் கேரளத்தில் பரசுராமரும் செய்தார் என்று நம்புவதற்கு இடம் இருக்கிறது.தமிழகத்தில் அகத்தியருக்கு இருக்கும் அதே இடம் கேரளத்தில் பரசுராமருக்கு இருக்கிறது.கேரளமே பரசுராம ஷேத்திரம் என்றுதான் அழைக்கப் படுகிறது.காடாக இருந்த கேரளத்தை நாடாக 'மாற்றியவர் 'என்று அவர் கருதப் படுகிறார்.அதேபோல் ராவணனுக்கும் தமிழ் மக்களுக்கும் உள்ள உறவை போல் மகாபலிக்கும் கேரள மக்களுக்கும் உள்ள உறவும் கூர்ந்து கவனிக்கத் தக்கது.

6 comments:

Pon Subramaniyan Chandrasekaran said...

agasthiyar terku sendru ulagayae saman padithinar enbatharku ariviyal aatharamaga terkil ulla paraikalai veti parthal ulagathilayae kadinamanana , uruthivaintha paraigal irupathai parkalam ...

virutcham said...

அகத்தியர் பற்றிய அனைத்து பதிவுகளும் படித்தேன். சுவாரஸ்யமாய் இருந்தது. நிறைய புது தகவல்கள். எளிமையாகவும் தொய்வில்லாமலும் எழுதி இருப்பது சிறப்பு.
இன்னும் கொஞ்சம் ஆதாரங்களோடு எழுதினால் மேலும் சிறப்பாக இருக்கும்.

வாழ்த்துக்கள்

bogan said...

நன்றி.ஒரு மெலிதான மனச் சோர்வும் சந்தேகமும் இருந்தது.இது போல் விசயங்களை எழுதினால் யாரும் படிப்பார்களா என்று.நான் எழுதுவது ஒன்றும் நான் புதிதாக கண்டுபிடித்த விசயங்கள் அல்ல.ஆனால் பொதுவெளியில் அதிகம் வராத பேசப்படாத விசயங்கள்.அவ்வளவே.தொடர் முடிவில் எங்கிருந்து இந்த யூகங்களை பெற்றேன் எனக் குறிப்பிடுகிறேன்

meenakshi said...

உங்கள் பதிவு இப்பொழுதுதான் எனக்கு அறிமுகம் ஆனது. மனம் நிறைந்த பாராட்டுக்கள். 'மர்ம யோகி அகத்தியர்' தலைப்பை பார்த்தவுடனேயே படிக்க ஆவல் வந்தது. படிக்க ஆரம்பித்ததும், நிறுத்த மனமில்லாமல் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். மிகவும் சுவாரசியமாக, தெளிவாக எழுதி இருக்கிறீர்கள்.
//ஒரு மெலிதான மனச் சோர்வும் சந்தேகமும் இருந்தது.இது போல் விசயங்களை எழுதினால் யாரும் படிப்பார்களா என்று.//
பிறர் படிப்பார்களா, மாட்டார்களா என்ற எண்ணங்களை தவிர்த்து, நீங்க எழுத நினைப்பதை எழுதுங்கள். உங்கள் எழுத்துகளை ரசிப்பதற்கும் எங்களை போல வாசகர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். நன்றாக இருக்கிறது உங்கள் பதிவும், கவிதைகளும். தொடருங்கள்!

meenakshi said...

நீங்கள் எழுதி இருப்பது சரிதான். பெண் தெய்வங்களை திருப்தி படுத்த என்று செய்யும் சடங்குகளில் சில இன்றும் மிகவும் வன்முறையாகத்தான் இருக்கிறது. எல்லாம் தெய்வங்களின் பெயர்களை சொல்லி மனிதர்கள் நடத்தும் அட்டூழியம்.

bogan said...

சோர்வுக்கு காரணம் வழக்கமாக சித்தர்களை மொத்தமாக புறக்கணிக்கும் போக்கு அல்லது கடவுள்களாக வழிபடும்போக்கு இரண்டு நிலைகளே தமிழ்ச்சூழலில் நிலவுகிறது.இந்த கட்டுரையின் கோணம் இரண்டும் அல்ல.So this viewpoint will have few takers.இதை முன்பே அறிந்திருந்தேன் எனினும் ஆளில்லாக் காட்டில் கூவிக் கொண்டிருக்கிறேனா என்று ஒரு ஐயம் அவ்வளவே.நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails